×
Saravana Stores

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிமுகம் : தேசிய மக்கள் சக்தி கூட்டணி 107 இடங்களில் முன்னிலை!!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்றது. இதில், 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசநாயக உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி போட்டியிட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 60% அதிகமான வாக்குகளை பெற்று 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61.73 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 இடங்களில் ஆளுங்கட்சி முன்னிலை வகிக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திரிகோண மலை ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சி 2ம் இடத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளன.

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிக இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் எஞ்சிய 29 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் அவசியமாகும். நாடாளுமன்றத்தில் அதிபரின் கட்சிக்கு அல்லது அணிக்கு பெரும்பான்மை இல்லை எனில் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எனவே அதிபர் அநுர குமார திசநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வேண்டியது அவசியமாகும்.

The post இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிமுகம் : தேசிய மக்கள் சக்தி கூட்டணி 107 இடங்களில் முன்னிலை!! appeared first on Dinakaran.

Tags : RULING PARTY ,SRI ,LANKA PARLIAMENTARY ELECTIONS ,NATIONAL PEOPLE'S POWER ,Colombo ,National People's Power Alliance ,President ,Anura Kumara Ditsanayaka ,Sri Lanka ,Lanka ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!