×
Saravana Stores

அரியலூர் மாவட்டத்தில் 69 பணிகளுக்காக ₹156 கோடி நிதி ஒதுக்கீடு

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டத்தில் 69 பணிகளுக்காக ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 39 பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 7 வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அரியலூரில் அமைச்சர் எவ.வேலு கூறுினார். தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்துபொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்காக கொல்லாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும், ஜெயங்கொண்டம் ஆய்வு மாளிகை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உடனிருந்தனர்.

பின்னர், பொதுப் பணித்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் 69 பணிகளுக்காக ரூ.156 கோடி நிதியானது தமிழ்நாடு முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றில் 39 பணிகள் நிறைவுற்றது, 07 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள உள்ள பணிகள் துவக்கப்படுகின்ற நிலையில் உள்ளது. அவற்றில் சிறப்பானதொரு பணியாக ஜெயங்கொண்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் ரூ.29 கோடி மதிப்பில், தரைதளம், மேலே 6 தளங்களுடன், சுமார் 79,900 சதுரடி கொண்ட கட்டடமாகும். பொதுமக்களின் பயன்பாடுகளுக்காக அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவர்கள் அறை, தீவிர சிகிச்சை அறைகளும், மேலும், சி.டி.ஸ்கேன் கொண்டுவரப்பட இருக்கிறது. மருந்தகம், ஆய்வகம், சித்தா யோக முறை பிரிவுகள் வர இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்திற்கு 2024-25ம் ஆண்டில் கூடுதலாக ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் உடையார்பாளையம் மருத்துவமனையில் கட்டடம், ஜெயங்கொண்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆய்வகம் ஆகியவை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.557 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள், விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024-25 ம் ஆண்டில் 30 கி.மீ பணிகளுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அரியலூரிலிருந்து விருத்தசாலம் வரை உள்ள 74 கி.மீ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 74 கி.மீட்டரில் அரியலூர் மாவட்டத்தில் 47 கி.மீ உள்ளது.

இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக மாற்றும் பணிகளுக்காக ரூ.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை பணிகளும் நடைபெற்று வருகிறது. செந்துறையை பொறுத்தமட்டில் புறவழிச்சாலை பணிகளுக்காக நிலமெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் முடிவுற்றவுடன் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். கிராமபுறங்களில் தரைபாலங்கள் அமைப்பதன் காரணமாக மாணவர்கள் மழைகாலங்களிலும் சிரமமின்றி பள்ளிகளுக்கு செல்கின்றனர். விவசாயிகளும் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்ல முடிகிறது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 23 தரைபாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 21 தரைபாலங்கள் கட்டப்பட இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறை மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டத்தில் புறவழிச்சாலையை பொறுத்தமட்டில் திட்டமதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் 69 பணிகளுக்காக ₹156 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Minister ,Eva Velu ,Tamil ,Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் சிலையை...