×
Saravana Stores

வீட்டில் எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வைத்த எலி மருந்து நெடி பரவியதால் மூச்சுத்திணறி 2 குழந்தைகள் பலி: குன்றத்தூர் அருகே சோகம்; பெற்றோருக்கு தீவிர சிகிச்சை

சென்னை: குன்றத்தூர் அருகே வீட்டில் எலிகளை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த எலி மருந்து காற்றில் பரவியதால் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனவைி பவித்ரா (30). மகள் வைஷாலினி (6), மகன் சாய்சுந்தரேசன் (1). குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் கிரிதரன் மேலாளராக கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். குழந்தை வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர்களது வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால், எலி தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக என்ன செய்யலாம் என்று நெட்டில் தேடி பார்த்தபோது சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் கண்ட்ரோல் ஒன்றின் முகவரி கிடைத்தது. அதில், தொடர்புகொண்டு கிரிதரன் பேசியுள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் கிரிதரன் வீட்டிற்கு வந்த 2 பேர், அவரது வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்தும், வீடு முழுவதும் எலிகள் வராமல் இருப்பதற்காக மருந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. எலி மருந்து அடித்த பிறகு அந்த வீட்டில் குறைந்தது 4 மணிநேரமாவது ஜன்னல், கதவை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஏ.சி.யை ஆப் செய்ய வேண்டும். ஆனால், அன்று இரவு அனைவரும் வீட்டில் ஏ.சி.யை ஆன் செய்து அயர்ந்து தூங்கி உள்ளனர்.

நள்ளிரவில் ஏசி காற்று வாயிலாக மருந்தில் இருந்து பரவிய நெடியால் குழந்தை வைஷாலினிக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று அதிகாலை அனைவருக்கும் வாந்தி, மயக்கம் நெஞ்சுவலி ஏற்படவே, நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் வைஷாலினி மற்றும் சாய் சுந்தரேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மயக்க நிலையில் இருந்து உயிருக்கு போராடிய கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், எலி மருந்தை அடித்த நபர்களில் ஒருவர் சங்கரதாஸ் என்பதும், அவர் சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மருந்து அடித்த சென்னை தியாகராய நகர் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் எலியை கொல்வதற்காக அடித்த விஷ மருந்து நெடி பரவியதால் 2 குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டில் எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வைத்த எலி மருந்து நெடி பரவியதால் மூச்சுத்திணறி 2 குழந்தைகள் பலி: குன்றத்தூர் அருகே சோகம்; பெற்றோருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kunradur ,CHENNAI ,Kunradthur ,Dinakaran ,
× RELATED சென்னை குன்றத்தூரில் ஆற்காடு பிரியாணி கடைக்கு சீல்..!!