×
Saravana Stores

பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்; முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு

மதுரை: ‘கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது. பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்களை ஏற்படுத்தக்கூடாது’ என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி நடந்த பிராமணர்கள் சங்க ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பல்வேறு தெலுங்கு அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளித்த புகாரின் படி அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவானார். மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ காட்சி நீதிபதி முன்பு போட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘கற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என கூறிக்கொள்ளும் கஸ்தூரி எப்படி, இப்படி பேச முடியும். தவறை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தவே கஸ்தூரி விரும்புவதாக அவரது விளக்கம் உள்ளது. தெலுங்கு மக்கள் குறித்த அவரது பேச்சு தேவையற்றது. அவரது பேச்சு ஆபத்தை விளைவிக்கும்’’ எனக் கூறி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரரின் பேச்சு, அதனை கேட்பவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனுதாரர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழ், தெலுங்கு பேசுபவர்களிடையே வன்முறையை ஏற்படுத்தி, உரிய நேரத்தில் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டு போல உள்ளது. அவரது பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்துள்ளது. பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. சுதந்திரமாக பேசும் உரிமையை தவறாக பயன்படுத்தக் கூடாது.

ஒரு பேச்சாளர் எப்போதுமே பொது மேடையில், குறிப்பாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற பிரச்னைகளை பேசுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். ஏனென்றால் அந்த கருத்துகள் அனைத்தும் நிரந்தரமாக பதிவாகிறது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மொழியின் அடிப்படையில் இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. மனுதாரர் மேடையில் பேசியது உண்மையில் தெலுங்கு மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. நமது குரல்களை நன்மைக்காகப் பயன்படுத்த உறுதி ஏற்போம் என்ற உண்மையை இந்த நீதிமன்றம் வலியுறுத்த விரும்புகிறது.

உரையாடலின் முக்கியத்துவம் என்பது வார்த்தைகளை அக்கறையுடனும், கருணையுடனும் கையாளுவதே ஆகும். பிரிவினை மற்றும் வெறுப்பைக் காட்டிலும், புரிதலையும், இரக்கத்தையும் வளர்க்கும் உரையாடலுக்கு முயற்சிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாரத்தை நாங்கள் மதிக்கிறோம். ஒற்றுமை, முன்னேற்றத்திற்கான ஒரு கருவி. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னை கூறிக்கொள்ளும் கஸ்தூரியின் வாயில் இருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை. கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது.

இதுபோன்ற மோசமான மற்றும் மிதமிஞ்சிய கருத்தை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. தனது பேச்சை நியாயப்படுத்தவே முயன்றுள்ளார். அரைமனதோடு கோரப்படும் மன்னிப்பு ஏற்கனவே நடந்த சேதத்தை சரி செய்துவிடாது. இதுபோன்ற வழக்குகளில் பொது நலனையே நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். இதுபோன்ற பிதற்றல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வை தடுக்க முடியும்.

வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசினால், அதன் விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும். எனவே, உங்கள் வார்த்தைகளை அக்கறையுடனும், கருணையுடனும் கையாளுங்கள். கேவலமான கருத்துக்களை வெளியிடுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால், தப்பிக்கும் நோக்கில் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதன் அடிப்படையில் மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

* கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது. வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசினால், அதன் விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும்.
* கேவலமான கருத்துக்களை வெளியிடுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால், தப்பிக்கும் நோக்கில் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

* பாஜ நிர்வாகி வீட்டில் பதுங்கல்? கஸ்தூரியை கைது செய்ய மதுரை தனிப்படை சென்னையில் முகாம்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தான் எந்த நேரமும் கைதாகலாம் என பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தனக்கு நெருக்கமான சென்னையிலுள்ள பாஜ நிர்வாகிகளின் வீடுகளில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலால், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான 2 தனிப்படையினர் மதுரையில் இருந்து சென்னை சென்றுள்ளனர். இதனால் விரைவில் கஸ்தூரி கைதாகலாம் எனத் தெரிகிறது.

The post பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்; முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kasturi ,ICourt branch ,Madurai ,I-Court ,Kasthuri ,Chennai ,Egmore ,
× RELATED நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு..!!