நெல்லை: மாஞ்சோலையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு பஸ்சில் குவிந்து கிடந்த குப்பைகளை சுத்தம் செய்த பெண் பயணிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இயற்கை வனப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து மற்றும் குதிரை வெட்டி, கோதையாறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்னைக்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து சிலர் வீடுகளை காலி செய்து வரும் நிலையில், இந்த பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் ஓரிரு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாஞ்சோலை பகுதிக்கு நெல்லையில் இருந்து செல்லும் அரசு பேருந்து, கடந்த 25 நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் குப்பை கூளங்களோடு சென்றுள்ளது. நேற்று காலை 5 மணிக்கு ஊத்து பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து மாஞ்சோலைக்கு வந்த போது மாஞ்சோலையை சேர்ந்த தமிழரசி என்பவர் பேருந்தின் உள்ளே சேர்ந்த குப்பை குளங்களை காண பொறுக்காமல் தாமாகவே முன்வந்து பேருந்தை சுத்தம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த பெண் பயணியின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. மலையோர பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை வாரம் ஒருமுறையாவது பணிமனைக்கு கொண்டு சென்று சுத்தம் செய்திட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The post மாஞ்சோலையில் இருந்து நெல்லை வந்த அரசு பேருந்தில் குப்பைகளை சுத்தம் செய்த பெண் பயணி: சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது appeared first on Dinakaran.