உத்திரபிரதேசம்: புல்டோசர் கலாசாரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அந்த வழக்கை தொடர்ந்த ஜமியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சிகரமான செய்தி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றம் சாட்டப்படுபவர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் புதிய கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடித்து தள்ளுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை கண்டுகொள்ளாத பாஜக மாநில அரசுகள், சிறுபான்மையினரின் வீடுகளையே குறிவைத்து இடித்து வருவதாக மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது. புல்டோசர் கலாசாரத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்த வழக்கை தொடர்ந்தவர்களின் முக்கிய அமைப்பான ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவமானது என பாராட்டு தெரிவித்துள்ளது.
தீர்ப்பை வரவேற்றுள்ள உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடிக்கும் பாஜகவினர் அரசியல் அமைப்புக்கு எதிரானவர்கள் என்று சாடினார். இதற்கிடையே எதிர்கால விவகாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முன் உதாரணமாக அமைந்து இருப்பதாக வழக்கு தொடர்ந்த ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு கூறியுள்ளது. இடிக்கப்பட்ட வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
The post புல்டோசர் கலாசாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு வரவேற்பு!! appeared first on Dinakaran.