*பிரிண்டர், கலர் இங்க், ரூ.2.5 லட்சம் பறிமுதல்
திருமலை : திருப்பதியில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே அச்சடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட தந்தை, மகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரிண்டர், கலர் இங்க் மற்றும் ₹2.5 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம் திருப்பதி செர்லோபள்ளி சந்திப்பில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சந்தியா.
மகள் ஈஷா. ரமேஷின் நண்பர் முனிகிருஷ்டாராவ். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்டாராவுக்கும், ரமேஷ்க்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முனிகிருஷ்டாராவ், ேஷர் மார்க்கெட் தொடர்புடைய தொழில் செய்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து நாளடைவில் முனிகிருஷ்டாராவ் கேட்டுக்கொண்டதன்பேரில், ரமேஷ் தனது வீட்டில் முனிகிருஷ்டாராவை தங்க வைத்துள்ளார். அங்கிருந்து முனிகிருஷ்டாராவ், ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் ஷேர் மார்க்கெட்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனிகிருஷ்டாராவ், பணம் சம்பாதிப்பது குறித்து ரமேஷ் குடும்பத்தினருடன் சேர்ந்து யூடியூப்பில் வீடியோ பார்த்துள்ளார்.
அப்போது கள்ள நோட்டு அச்சடிப்பது குறித்த வீடியோவை பார்த்த அவர்கள் கள்ளநோட்டு அச்சடிக்க திட்டமிட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் அதற்கு தேவையான பொருட்களை வாங்கி சேகரித்தனர். பிரிண்டர், இங்க் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க தொடங்கினர். சுமார் 3 மாதம் வரை தொடர்ந்து ரூ.10 லட்சம் வரை பிரிண்ட் செய்து தயாராக வைத்துக்கொண்டனர்.
பின்னர் அதனை திருப்பதி, சித்தூர், நகரி, புத்தூர், வெங்கடகிரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறிய கடைகளில் புழக்கத்தில் விட திட்டமிட்டனர். இதற்காக கள்ள நோட்டுகளுடன் ஆளுக்கு ஒருபுறமாக சென்று கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்கி மாற்றி வந்துள்ளனர். கடந்த 9ம் தேதி இரவு ரமேஷ், தனது மகள் ஈஷாவுடன் புத்தூருக்கு காரில் சென்றார். அங்கு பல்வேறு கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு கள்ளநோட்டுகளை மாற்றியுள்ளனர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள், ரூபாய் நோட்டுகளை பணம் எண்ணும் மெஷினில் வைத்து சோதனையிட்டனர். அப்போது அது கள்ள நோட்டுகள் என தெரிந்தது. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், தந்தை மகளை பிடித்து விசாரித்தனர். பின்னர் ரமேஷின் வீட்டில் சோதனையிட்டபோது பிரிண்டர், கலர் இங்க், பேப்பர் கட்டர் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ரூ.100, 500 கள்ளநோட்டுகள் இருந்தது.
உடனே அவற்றையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து புத்தூர் டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், அவரது மனைவி சந்தியா, மகள் ஈஷா, நண்பர் முனிகிருஷ்டா ராவ் ஆகிய 4 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். மேலும் இவர்கள் எங்கெல்லாம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post யூடியூப் பார்த்து வீட்டிலேயே அச்சடித்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட தந்தை, மகள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.