* அதிமுக கிடப்பில் போட்ட திட்டம்
* தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில்வே மேம்பாலத்திற்காக ரூ.,40 கோடி மதிப்பில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்து.
இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் இருந்து வந்தது. மேலும் சாலைகள் போன்றே பாலங்கள் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக புதிய பாலங்கள் கட்டுமான பணியும் தடைப்பட்டன.
இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்குமாறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தேவையான நிலம எடுக்கும் பணிகள் மற்றும் என்ஓசி சான்று மற்றும் சாலை அமைக்க தேவையான மண் மற்றும் அரளைகள் போன்றவற்றினை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மேற்பார்வையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்படாத அனைத்து சாலைகளும் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 250 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்புப்பணி நடைபெற்றுள்ளன.
இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் பாலங்கள், சிறு கல்வெட்டுகள் மற்றும் மழைநீர் வடிகால் போன்றவையும் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சென்னை- கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தட சாலைகள் அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையானது தற்போது இருவழிசாலை அளவிற்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறைக்கு பின்னர் சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னை செல்வதற்கான முக்கிய சாலையாக இந்த சாலையானது இருந்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் என்ற இடத்தில் இருந்து வரும் ரயில்வே கேட் மூடப்படுவதால் தினமும் பல மணி நேரம் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட உரிய நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இதுமட்டுமின்றி பள்ளி, கலலூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.
இதனைகருத்தில் கொண்டு அந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து கடந்த 2016ம் ஆண்டில் மேம்பாலத்திற்கான பணிகள் அனைத்தும் ரயில்வே துறை சார்பில் முடிக்கப்பட்டன. ஆனால் மாநில அரசின் சார்பில் நடைபெற வேண்டிய அணுகுசாலைப் பணி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்கம் மற்றும் பாலங்கள் ஆகியவற்றிற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பேரளம் ரயில்வே மேம்பாலத்திற்கான அணுகு சாலை பணிக்காகவும் ரூ 40 கோடி நிதி ஓதுக்கப்பட்டு இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியானது தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இதற்காக தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில்வே மேம்பால அணுகு சாலை பணி மும்முரம் appeared first on Dinakaran.