*விவசாயிகள் சோகம்
குன்னூர்: மேகமூட்டமான காலநிலை காரணமாக குன்னூர் சுற்று வட்டார பகுதியில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச்செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலும் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலை விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இங்கு பறிக்கப்படும் தேயிலையை, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, இலாபத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.
குறிப்பாக மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே பசுந்தேயிலை அரும்பு துளிா்விட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால், தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவுவதால் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான காட்டேரி, பழத்தோட்டம், பெட்டட்டி போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைச்செடிகளில் கொப்புள நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
பொதுவாக, டிசம்பர் மாதம் முடியும் வரை பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருவதால் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளுக்கு சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 வரை நல்ல விலை கிடைக்கும் சமயத்தில், தேயிலைச்செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் குன்னூர் பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
The post மேகமூட்டமான காலநிலை எதிரொலி குன்னூர் பகுதியில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச்செடி பாதிப்பு appeared first on Dinakaran.