×
Saravana Stores

தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

வல்லம், நவ. 12: தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியை சேர்ந்தவர் குமார்(40), சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி மகாராணி(35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஓவியா(14), தாரிகா(12) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை குமார், அவரது மனைவி மகாராணி இருவரும் வீட்டில் ஒரே சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் நேற்று காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை-சென்னை தேசிய நெடுஞ்சாலை வல்லம் கூட்ரோடு பகுதியில் திரண்டு, அவ்வழியே வந்த பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இந்த சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த தம்பதியரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தொடர் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vallam ,Kumar ,Vallam panchayat ,Villupuram district ,Maharani ,
× RELATED தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை...