×

கூலித்தொழிலாளி வீட்டில் 9 சவரன் நகை, ₹70 ஆயிரம் திருட்டு * 2 செல்போன்கள், பைக்கும் அபேஸ் * மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை பள்ளிகொண்டாவில் நள்ளிரவு துணிகரம்

பள்ளிகொண்டா, நவ.12: பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் கூலித்தொழிலாளி வீடு புகுந்து 9 சவரன் நகைகள், ₹70 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பள்ளக்கொல்லை கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் முரளி(60). செங்கள் சூளை கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரங்கம்மா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மகன் ஏழுமலை தனது மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் முரளி, ஏழுமலை, ரங்கம்மா ஆகிய 3 பேரும் வழக்கம்போல் செங்கல் சூளை பணிக்கு சென்றுவிட்டு மாலை வந்தனர். பின்னர், இரவு அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு விட்டு தங்களது அறைகளில் தூங்க சென்றனர்.

தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் ரங்கம்மா எழுந்து வெளியே பார்த்தபோது, அவர்களது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அறையின் உள்ளே சென்று சாவியுடன் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த 9 சவரன் நகைகள் மற்றும் ₹50 ஆயிரம், டிரஸ்ஸிங் டேபிளில் இருந்த ₹20 ஆயிரம் பணம் திருட்டுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பீரோவின் அருகே இருந்த கட்டில் மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை தேடியபோது அவைகளும் திருட்டுபோனது தெரியவந்தது.

திருட்டு நடந்த கூலித்தொழிலாளி முரளி வீட்டில் மொத்தம் 3 அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 2 அறைகளில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். மற்றொரு அறையில் யாரும் இல்லாத நிலையில் மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீடு புகுந்து சாவகாசமாக இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, முரளி இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் வெளிகேட், கதவு, பீரோ என எதையும் பூட்டி வைக்காமல் இருந்ததால் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலும் சாவி இருந்ததால் மர்ம ஆசாமிகள் அதனையும் விட்டு வைக்காமல் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

The post கூலித்தொழிலாளி வீட்டில் 9 சவரன் நகை, ₹70 ஆயிரம் திருட்டு * 2 செல்போன்கள், பைக்கும் அபேஸ் * மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை பள்ளிகொண்டாவில் நள்ளிரவு துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Pallikonda ,Vellore district ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...