எனவே, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்கும், மன அழுத்தங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கும், கோச்சிங் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி, 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்த மாணவர்களை மட்டுமே கோச்சிங் சென்டர்களில் சேர்க்க வேண்டும். இதற்கு குறைவான வயதுள்ள மாணவர்களை தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கக்கூடாது. மேலும் மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படும் வகையில் பாடம் நடத்தக் கூடாது.
மன அழுத்தத்தை போக்கும் வகையில், மன நல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்களிடம் அதிகளவில் கட்டணங்களை வசூல் செய்யக்கூடாது. மாநில அரசு அதிகாரிகள் பயிற்சி மையங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது ரூ.1 லட்சம் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது.
ஒன்றிய அரசின் இந்த கட்டுப்பாடுகள், மாணவர்களின் தொடர் தற்கொலை காரணமாக கோட்டாவில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது 40 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அருகே உள்ள ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் புதிய மையங்கள் ஆரம்பித்து மாணவர்களை ஈர்த்து வருவதால் கோட்டாவில் இருந்து மாணவர்கள் பலரும் அந்தப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஆண்டுக்கு 1.40 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது 85 ஆயிரமாக சரிந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 10ல் இருந்து ரூ.25 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ரூ.22 லட்சம் முதல் சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி வரையிலும் சம்பளம் அளிக்கப்படுகிறது. தற்போது மாணவர்களின் வருகை குறைந்துகொண்டே வருவதால் ஆசிரியர்களையும் குறைத்துள்ளனர்.
இந்த கோச்சிங் சென்டர்களை வைத்து வருமானம் ஈட்டி வந்த உணவகங்கள் தங்கும் விடுதிகள், ஆட்டோ ஓட்டுநர்களும் இதனால் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் தள்ளாட்டத்தில் உள்ள கோட்டா நகரம் விரைவில் நீட் பயிற்சியில் தனது ஆதிக்கத்தை இழந்துவிடும் எனவும் கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.
* உள்ளூர் கோச்சிங் சென்டர்களுக்கு மவுசு
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: பல கல்வி நிறுவனங்களில் போட்டிகள் அதிகரித்து விட்டது. கோட்டா நகரை பொறுத்தவரை முன்பெல்லாம் குறைந்த அளவு மாணவர்கள் இருந்தனர். அதனால் மாணவர்களின் மீதான பாதுகாப்பு சரியாக இருந்தது. ஆனால் அதிக வருமானம் ஈட்டும் எண்ணத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்த்து ஒரு ஆடிட்டோரியத்தில் 300 பேரை வைத்து வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. படிக்கும் சூழலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. விளையாட்டு போன்ற மற்ற விஷயங்களில் மாணவர்களை ரிலாக்ஸ் செய்யாமல், கோச்சிங் கோச்சிங் என்று இருப்பதால், அவர்களின் மனம் இறுகி, நடவடிக்கைகள் மாறுகிறது. எனவே அதிக தொகை கொடுத்து தங்கள் பிள்ளைகளின் மனதை காயப்படுத்துவதற்கு பதில், தங்கள் பகுதிகளில் உள்ள சிறிய கோச்சிங் சென்டர்களில் சேர்த்து படிக்க வைக்கலாம் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் வந்துவிட்டது. இதன் காரணமாகவே கோட்டாவில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* தற்கொலை
கோட்டா நகரில் கடந்த 2022ல் 15 மாணவர்களும், 2019ல் 18, 2018ல் 20, 2017ல் 7, 2016ல் 17 மற்றும் 2015ல் 18 மாணவர்கள் என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலை தொடர்கிறது. இதில் 2023ல் தான் இதுவரை இல்லாத அளவு 26 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
The post ராஜஸ்தானில் கோட்டாவை புறக்கணிக்கும் மாணவர்கள்: தள்ளாட்டத்தில் நீட் கோச்சிங் தலைநகர்; தொடர் தற்கொலைகள் காரணமாக காற்று வாங்கும் பயிற்சி மையங்கள் appeared first on Dinakaran.