×
Saravana Stores

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு

டெல்லி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்.21-ல் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் வேலை கேட்டு வரும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்து வீடியோ எடுத்ததாக பிரஜ்வல் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஜே.டி.எஸ். கட்சி முன்னாள் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு ஆக.24-ல் 2144 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது கசிந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு ரேவண்ணாவின் மனு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் மூலமாக ரேவண்ணா தமது மனுவை தாக்கல் செய்திருந்தார். மூத்த வழக்கறிஞரான முகுல் ரோகத்கி, ரேவண்ணாவின் சார்பில் வாதாடிய போது, குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானவை என்றாலும், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் சட்டப்பிரிவான ஐ.பி.சி. 376 சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமது கட்சிக்காரர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு இந்த குற்றச்சாட்டுக்களால் தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் குறிப்பிட்டார்.

“நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர்” என நீதிபதி திரிவேதி குறிப்பிட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ரோகத்கி சுட்டிக்காட்டினார். “நான் வெளிநாட்டில் இருந்தேன். திரும்ப வந்ததுமே சரணடைந்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்துள்ளேன். தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் இதனால் இழந்திருக்கிறேன்” என பிரஜ்வல் தரப்பு வாதங்களை ரோகத்கி முன்வைத்தார். இருப்பினும் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மனுவை டிஸ்மிஸ் செய்வதாக நீதிபதி திரிவேதி அறிவித்தார்.

 

 

 

 

 

The post பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Prajwal Revanna ,Delhi ,Karnataka High Court ,Jamin ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் மறுப்பு