வேலூர், நவ.11: வேலூர் சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் குறைந்த நிலையில் ₹20 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். 200 ஆண்டுகளை கடந்த பழமையான வேலூர் சண்டே மார்க்கெட்டில் பழங்கால பொருட்கள் முதல் நவீன கால கம்ப்யூட்டர்கள் வரை விற்பனைக்காக கிடைக்கும். குறிப்பாக பழங்கால கலை பொருட்கள், கிராம போன்கள், கிராம போன் தட்டுகள், டேப் ரிகார்டர்கள், சிடி பிளேயர்கள், ஸ்பீக்கர்கள், ரேடியோக்கள், டிவிக்கள், ஜிம்முக்கான சாதனங்கள், புத்தகங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கிறது. இத்தொழிலில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். சண்டே மார்க்கெட் கடைகளை பொறுத்தவரை லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் சாலை தொடங்கி கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு ஆசிரியர் இல்லம் வரை கடைகள் வைக்கப்படுகின்றன.
சண்டே குஜிலி பஜார் என்று அழைக்கப்படும் சண்டே மார்க்கெட்டில் ஒவ்வொரு வாரமும் ₹10 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ₹60லட்சம் முதல் ₹80 லட்சம் வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப விற்பனை நடைபெறும். தீபாவளி பண்டிகை சீசன் முடிந்த நிலையில், மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்துள்ளது. இதனால் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்தாலும் வர்த்தகம் என்பது ₹20 லட்சத்துக்கு மட்டும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘வேலூர் சண்டே மார்க்கெட்டை பொறுத்தவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் தவிர அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்ட மக்களும் பழைய இயந்திர தளவாடங்கள், இயந்திர உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இருசக்கர வாகன உதிரி பாகங்கள், புத்தகங்கள் வாங்க வருகின்றனர். ஆனால் தீபாவளி முடிந்தும், இன்று(நேற்று) எங்கள் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்தாலும் விற்பனை என்பது மந்தம்தான்’ என்றனர்.
The post வேலூர் சண்டே மார்க்கெட்டில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம்: வியாபாரிகள் தகவல் appeared first on Dinakaran.