×
Saravana Stores

இயற்கை எழில் நிறைந்த மலை கிராமத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி: விடுமுறை நாட்களில் அலைமோதும் கூட்டம்

ஒடுகத்தூர், நவ.11: ஒடுகத்தூர் அருகே சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மலை கிராமத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து இருக்கும் போது வேலூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டிலேயே வெயிலுக்கு மட்டும் வேலூர் பிரபலம் இல்லை, சுற்றுலா தலத்திற்கும் பிரபலமாக இருந்தது.

இதனாலேயே, வேலூரை வெயிலூர் மாவட்டம் என்றும், கோட்டை மாவட்டம் என்றும் எல்லோரும் கூறுவர். ஆனால், வேலூர் மாவட்டம், மூன்றாக பிரித்த நாள் முதல் மாவட்டத்தில் வேலூர் கோட்டை, தங்க கோயில், அமிர்தி, மோர்தானா அணை என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தற்போது சுற்றுலா தலங்கள் உள்ளது.

இதனால், ஒரு சில இடங்களே சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளும் பெரிதளவில் மாவட்டத்திற்கு வந்து செல்வது குறைந்து விட்டது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிதும் பேசப்படாத சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும், ஓடைகளும் மலை கிராமங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இதனை, ஆர்வமுள்ள ஒரு சிலர் மட்டுமே தேடி கண்டுபிடித்து பிரபலப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரிதும் பேசப்படும் நீர்வீழ்ச்சி ஒன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது. ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான்கொல்லை மலை கிராமத்தில் தான் அந்த அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது. ஒடுகத்தூரில் இருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியானது 50 அடிக்கு மேல் இருந்து பாறைகளை பிளந்து தண்ணீர் கொட்டுகிறது.

இயற்கை எழில் நிறைந்த மலைகளுக்கு நடுவே இந்த நீர்வீழ்ச்சி இருந்தாலும் கரடுமுரடான மலை கிராம சாலைகளை கடந்து தற்போது சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சிக்கு தெள்ளை மலை கிராமம் வழியாகவும் வந்து செல்லலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் இந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை, காண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதாக மலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், சிறு சிறு ஓடைகள் உண்டாகி இது போன்று நீர்வீழ்ச்சி ஏற்படும் போது அது மலை கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மாவட்டத்தில், சுற்றுலா தலங்கள் பெரிதும் இல்லாத போது இது போன்ற நீர்வீழ்ச்சிகள் பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

The post இயற்கை எழில் நிறைந்த மலை கிராமத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி: விடுமுறை நாட்களில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Vellore ,Ranipet ,Tirupattur ,
× RELATED இளம்பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை கணவர்...