புதுக்கோட்டை, நவ.10: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிகளைத் தேவையான அளவு பயன்படுத்திட வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்துப் பல்வேற பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. பரிந்துரைக்கப்படும் அளவிற்கு மேற்பட்டு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும், பரிந்துரைக்கப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும், தானியப் பயிர்களிலும் காய்கறிப் பயிர்களிலும் எஞ்சிய நஞ்சு தங்கிவிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பயன்படுத்துவோர்க்கும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கிறது என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
மேலும், விவசாயிகள் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் இரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டினை வெகுவாகக் குறைக்கலாம்.
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: பூச்சி, நோய்க் கட்டுப்பாட்டிற்குப் பெரும்பாலும் இரசாயன மருந்துகள் மட்டுமே தொடர்ந்து தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரசாயன மருந்துகளைத் தெளிக்கும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளவில்லையெனில் அதனைத் தெளிப்பவர்களுக்கும் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகும். எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையானது பொருளாதாரச் சேத நிலையை அடைந்தால் மட்டுமே ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரை செய்யப்படும் அளவு நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் எனில் ஏக்கருக்கு 200 லிட்டர், விசைத் தெளிப்பான் எனில் ஏக்கருக்கு 60 லிட்டர் நீர் பயன்படுத்த வேண்டும்.
மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, கண்ணாடி, முகக் கவசம் இவற்றுடன் முழுக்கைச் சட்டையும் கண்டிப்பாக அணிந்துகொண்டு மருந்து தெளிக்க வேண்டும். இதனால் 99 சதவீதம் மருந்தானது உடலின்மேல் படுவது தவிர்க்கப்படும். பூச்சிக்கொல்லிக் கொள்கலன் மேல் ஒட்டப்பட்டுள்ள சிட்டையில் குறிப்பிட்டவற்றை நன்கு படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைக் காலை அல்லது மாலை வேளையில் அதாவது குளிர்ச்சியான பொழுதுகளில் மட்டுமே தெளிக்க வேண்டும். மருந்தினை அளப்பதற்கும், கலக்குவதற்கும் கண்டிப்பாக வெறும் கைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குரிய தகுந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. கூடுதல் தகவல்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடியில் பூச்சிக்கொல்லிகளை வேளாண்மை-உழவர் நலத்துறையின் பரிந்துரையின்படி பயன்படுத்திடவும், சரியான பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
The post பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சி கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.