×
Saravana Stores

ஊட்டியில் மேக மூட்டம், சாரல் மழையால் குளிர் அதிகரிப்பு

ஊட்டி : ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை காணப்படும் நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி மழை 2 மாதங்களுக்கு பெய்தது. இந்த 2 மாதங்களும் ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டால், அவ்வப்போது மேக மூட்டம், சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

கடந்த 2 நாட்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று ஊட்டியில் காலை முதலே மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், காலை, இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறு குழந்தைகளும் குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதிகாலை நேரங்களில் மேக மூட்டம் அதிகள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமத்திற்குள்ளாகினர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. குளிர் அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர்.

The post ஊட்டியில் மேக மூட்டம், சாரல் மழையால் குளிர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில்...