×
Saravana Stores

சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சூரசம்ஹாரம்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

கீழ்வேளூர் : சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சூரசம்ஹாரம் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் (முருகன்) கோயில் உள்ளது. வஷிஷ்ட மகரிஷி காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்கம் அமைத்து பூஜித்த கோயிலாகும். பூஜை முடிவில் வெண்ணெய் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. இதனால் கோயிலில் வெண்ணெய்பெருமான் நவநீதேஸ்வரராகவும், பார்வதி வேல்நெடுங்கண்ணியாகவும் அருள்பாலித்து வருகின்றனர். தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகன் வதம் செய்ததாகவும், அந்த கொலை பாவம்தீர கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் முருகன் தவம் இருந்ததாகவும் புராண வரலாறாகும்.

இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.தொடர்ந்து இரவு சூரனை வதம் செய்ய வேல்நெடுங்கண்ணியிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல்நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலவர் வேல் வாங்கும்போது சிங்காரவேலவர் முகத்தில் முத்து, முத்தாக வியர்வை சிந்தும் அற்புதக்காட்சி நடந்தது. இந்த வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத ஒன்றாகும் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘முருகா, முருகா’ கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு தங்க ஆட்டு கிடா வாகனத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (8ம் தேதி ) தெய்வானை திருக்கல்யாணம், நாளை (9ம் தேதி) வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. 10ம் தேதி விடையாற்றி, 11ம் தேதி யதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

The post சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Tags : Chikal Singhara Velavar Temple ,Sami Kilvellur ,Surasamharam ,Sami ,Nagapattinam ,Singharavelavar ,Murugan ,Vashishtha ,Maharishi Kamathenu's… ,Chikal Singhara Velavar ,Temple ,
× RELATED முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும்...