×

மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


திருவொற்றியூர்: மணலி சடையன்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மணலி மண்டலம், 16வது வார்டில் உள்ள பர்மா நகர், சடையன்குப்பம், எலந்தனூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் திருவொற்றியூர் பகுதிக்கு எளிதாக சென்று வரும் வகையில் சடையன்குப்பம் அருகே உள்ள புழல் ஏரி உபரி நீர் கால்வாய் மீது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹19 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் குடிநீர் லாரி, 108 ஆம்புலன்ஸ், உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இதன் வழியாக சென்று வருகின்றன.

இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்பு அபாயமும் இருப்பதால் இரவில் இந்த மேம்பாலத்தில் அச்சத்துடன் மக்கள் செல்கின்றனர். அதுமட்டுமின்றி தனியாக நடந்து வரும் பொதுமக்களிடம் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறி செய்யும் சம்பவமும் நடைபெறுகிறது. எனவே இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சடையன்குப்பம் மேம்பால கட்டுமான பணியை கடந்த 2007ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.

19 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டிய இந்த மேம்பாலம் பல்வேறு காரணங்களால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தப்படாமல் கிடப்பில் இருப்பதோடு முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு இது திறந்து வைக்கப்படாமல் உள்ளது. மின்விளக்கு அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கேட்டால் சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம்தான் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளை கேட்டால், மேம்பாலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை, அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மறுக்கின்றனர்.

இந்த இரு துறை சார்ந்த அதிகாரிகளில் யார் மேம்பாலத்தில் மின்விளக்கு அமைப்பது என்ற போட்டி நிலவுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் மின்விளக்கு அமைப்பதற்கான நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

The post மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Manali Shadayangupam ,Manali Zone ,Parma Nagar ,16th Ward ,Chadayangupam ,Ellantanur ,
× RELATED கையில் பாம்புடன் டி.டி.எப்.வாசன்...