நாகர்கோவில், நவ. 8: குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா உத்தரவின்படி, தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நெஞ்சக நோய் மருத்துவ குழுவினரால், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைமுக பகுதிகளில் உள்ளவர்களுக்கும் காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, குளச்சலில் முதற்கட்டமாக காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதில் வட மாநில தொழிலாளர்கள், துறைமுக பணியாளர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை, சளி பரிசோதனை செய்யப்பட்டது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனையும் நடத்தப்பட்டது. மொத்தம் 84 தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடந்தது. இதில் 40 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை நடந்தது. மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சுபைர் ஹசன் முகமதுகான் தலைமையில் இந்த முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
The post குளச்சலில் துறைமுக பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் appeared first on Dinakaran.