வேலூர், நவ.5: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையொட்டி நடந்த சிறப்பு சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 126 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹8.16 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி தொடர்ந்து, 4 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு வந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் பஸ்கள், ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து சிலர் லாபம் பார்க்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில் கடந்த 28ம் தேதி தொடங்கி நேற்று காலை வரை சிறப்பு குழுக்கள் அமைத்து, டோல்கேட்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வேலூர் சரகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அதன்படி, கடந்த 28ம்தேதி முதல் நேற்று அதிகாலை வரை 7 நாட்களாக நடந்த சோதனையில் போக்குவரத்து விதி மீறல், சாலை வரி செலுத்தாதது, டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் பஸ் இயக்கியது, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் சரகத்தில் மொத்தம் 1,201 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அதில் 126 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வரி மற்றும் அபராதமாக ₹8 லட்சத்து 16 ஆயிரத்து 250 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. வரி செலுத்தாத ஒரு ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று காலையுடன் நிறைவடைந்தாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
The post தீபாவளியையொட்டி 7 நாள் சோதனையில் 126 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்: ₹8.16 லட்சம் வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.