×

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி


மும்பை: மும்பை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ராஷ்மி சுக்லா புனே நகர போலீஸ் கமிஷனராக இருந்த போதும், பின்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறையின் கமிஷனராக இருந்த போதும் அரசியல் தலைவர்களின் போன் பேச்சுக்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி அமைந்ததும், ராஷ்மி சுக்லா மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டார். அவர் மகாராஷ்டிரா போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு, பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில தேர்தல் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனேயே, ராஷ்மி சுக்லா டி.ஜி.பி. ஆக இருக்கும்வரை மகாராஷ்டிராவில் தேர்தல் நேர்மையாக நடக்காது என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் ராஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், அவருக்கு பதில் புதிய ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்குமாறும் மாநில தலைமை செயலாளர் சுஜாதா சவுனிக்கிற்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டுள்ளார். புதிய டி.ஜி.பி.யை நியமிப்பதற்கு வசதியாக 3 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஷ்மி சுக்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra Police DGP ,Election Commission ,MUMBAI ,Rashmi Shukla ,Pune ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முழு...