×

பூதப்பாண்டி அருகே பண பிரச்னையில் தகராறு தங்கையை கீழே தள்ளி கொன்ற அண்ணன் கைது

*அழுகிய நிலையில் சடலம் மீட்பு

பூதப்பாண்டி : பூதப்பாண்டி அருகே பண பிரச்னையில் தங்கையை கீழே தள்ளி கொன்றதாக அண்ணனை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆச்சியம்மாள் (54). இவர் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவரை பிரிந்து வந்து விட்டார். சுமார் 30 வருடங்களுக்கு மேல் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரர் பெருமாள் (58). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

மகன் சுவாமிநாதன், திருமணமாகி தனது குடும்பத்துடன் மணத்திட்டை பகுதியில் உள்ளார். கடந்த 30ம்தேதி பெருமாளுக்கும், அவரது மனைவி கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுவாமிநாதனுக்கு தகவல் வந்தது. அவர் காட்டுப்புதூருக்கு வந்து பெற்றோரை சமாதானம் செய்து, தனது தந்தை பெருமாளை, அதே பகுதியில் உள்ள அத்தை ஆச்சியம்மாள் வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்து விட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சுவாமிநாதனின் சித்தப்பா மகன் நிகேஷ் (21) ஆச்சியம்மாளை பார்க்க வந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆச்சியம்மாள் இறந்து கிடந்தார். இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆச்சியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதலில் பி.என்.எஸ். 194 (இயற்கைக்கு மாறான மரணம்) என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கடைசியாக பெருமாள் தான், ஆச்சியம்மாள் வீட்டுக்கு வந்தார் என உறுதியானதால், அவரிடம் விசாரணை நடந்தது. அப்போது சம்பவத்தன்று வாக்குவாதத்தில் தனது தங்கையை பிடித்து கீழே தள்ளியதில் அவர் இறந்து விட்டார் என பெருமாள் கூறினார். இதற்கிடையே ஆச்சியம்மாள் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை பி.என்.எஸ். 103 ன் கீழ் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, பெருமாளை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பெருமாளுக்கும், சகோதரி ஆச்சியம்மாளுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் தான் சம்பவத்தன்று ஆச்சியம்மாளை பெருமாள் தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அங்கிருந்து கோபத்தில் கதவை மூடி விட்டு பெருமாள் வெளியே சென்று விட்டார். யாரிடமும் இது குறித்து கூற வில்லை என கூறினர்.

The post பூதப்பாண்டி அருகே பண பிரச்னையில் தகராறு தங்கையை கீழே தள்ளி கொன்ற அண்ணன் கைது appeared first on Dinakaran.

Tags : Bothapandi ,Achiyammal ,Katupudur ,Kumari district Bothapandi ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது