×

பாஜ கூட்டணிக்கு பாமக முழுக்கு? ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எக்ஸ் தளத்தில் ராமதாஸ் திடீர் பதிவு: மகனுக்கு அங்கீகாரம் இல்லாததால் அதிருப்தி

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என்று கூட்டணியில் இருந்து விலகுவது போல திடீரென பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் பாமக அங்கம் வகித்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேஜ கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் படுதோல்வியை தழுவியது. சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் சுட்ட காயமாக இருந்து வரும் நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜ அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜ கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை ஒன்றிய அரசு அளித்தது. சொல்லும் படியான பெரிய பதவி அளிக்காதது பாமகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்றிய கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

குறிப்பாக கட்சி நிறுவனரும் அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதைத்தான் அவர் மறைமுகமாக பதிவில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த மக்களவைத் தேர்தலில் எங்களின் எதிர்ப்புகளை மீறி பாஜவுடன் கூட்டணி வைத்து பாமக படுதோல்வியை சந்தித்தது. தற்போது பாஜ ஆட்சி அமைத்தும் எங்களுக்கு ஆட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கூட்டணி மாறும். அதற்கு அச்சாரமாக தான் எங்கள் நிறுவனர் பழையன கழிதலும் என்று பழைய கூட்டணியை கழற்றி விட்டு, புதியன புகுதலும் புதிய கூட்டணிக்கு அச்சாரம் இடும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாசின் இந்த திடீர் பதிவு பாஜ தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாட்டை விஜய் நடத்தி முடித்து உள்ளார். வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாசின் இந்த எக்ஸ் தள பதிவு பேசுப் பொருளாகி உள்ளது.

The post பாஜ கூட்டணிக்கு பாமக முழுக்கு? ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எக்ஸ் தளத்தில் ராமதாஸ் திடீர் பதிவு: மகனுக்கு அங்கீகாரம் இல்லாததால் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Bhamaka ,Bahasa Alliance ,RAMADAS ,Viluppuram ,Bamaka ,Baja ,Teja ,
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே நீடிக்கும் சமரச பேச்சு!