×

தீபாவளி நெரிசலை சமாளிக்க மதுரை – சென்னைக்கு முதல்முறையாக ‘மெமு’ ரயில்

மதுரை: தீபாவளி கூட்ட நெரிசலைச் சமாளிக்க முதன் முறையாக சென்னை – மதுரை மற்றும் மதுரை – சென்னைக்கு மெமு ரயில் நேற்று இயக்கப்பட்டது. இதனை தொழிற்சங்கத்தினர், பயணிகள் வரவேற்றுள்ளனர். தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைச் சமாளிக்க மதுரையில் இருந்து சென்னைக்கு தெற்கு ரயில்வே முதல் முறையாக கழிவறை உள்ளிட்ட புதிய வசதிகளுடன் மெமு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, மதுரை – சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் – கழிவறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை போன்றது) ரயில் சேவை, நேற்று (நவ. 3) இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை (06099) சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.30 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.

இதேபோல் மதுரை – தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100), மதுரையில் இருந்து நேற்று இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, இன்று அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைந்தது. இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்றது. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மெமு ரயில் இயக்கப்பட்டதற்கு தொழிற்சங்கத்தினர், பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

The post தீபாவளி நெரிசலை சமாளிக்க மதுரை – சென்னைக்கு முதல்முறையாக ‘மெமு’ ரயில் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,MEMU ,Diwali ,Dinakaran ,
× RELATED போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி...