×

ரூ.114 கோடியில் கோவையில் 2வது ஐடி பார்க்: 3,250 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, தொழில் நகரமாக திகழ்கிறது. ஜவுளி, வார்ப்படம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, இன்ஜினியரிங், பம்ப்செட், கிரைண்டர் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோவை தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. சமீபகாலமாக, தகவல் தொழில்நுட்ப துறையிலும் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கோவையில் தங்களின் கிளைகளை துவக்கியுள்ளன. மேலும், பல நிறுவனங்கள் தங்களது கிளைகளை துவக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் இருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்புபடி, கோவையில் 744 ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐடி துறையில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை சரவணம்பட்டியில் தனியார் ஐடி பார்க் இயங்கி வருகிறது. இங்குள்ள ஐடி நிறுவனங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். பீளமேடு அரசு மருத்துவக்கல்லூரி அருகே தமிழ்நாடு அரசின் ஐடி பார்க் இயங்கி வருகிறது.

இங்கு, 25க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளை அமைத்துள்ளன. இதன்மூலம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் ஐடி துறையில் கோவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க் தயாராகியுள்ளது. அதாவது, கோவையின் அடையாளமாக ஐடி துறையை மாற்றவும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) மூலம், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றவும் தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த இரண்டாவது ஐடி பார்க் தயாராகி உள்ளது. கோவை விளாங்குறிச்சியில் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில்‌ ரூ.114.16 கோடி மதிப்பில் இப்புதிய தகவல்‌ தொழில்‌நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது, 3.94 ஏக்கர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக, பொதுப்பணித்துறை மூலம்‌ இந்த ஐடி பார்க் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம்‌ 2 அடித்தளம், தரைத்தளம்‌ மற்றும்‌ ஐந்து மேல்தளம் என மொத்தம்‌ 8 தளங்களுடன்‌ 27,379 சதுர மீட்டர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டுள்ளது. இதன் 2வது அடித்தளத்தில் 37,369 சதுர அடியில் 77 கார்‌ மற்றும்‌ 60 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

முதல் அடித்தளத்தில் 37,369 சதுர அடியில் 76 கார்‌ மற்றும்‌ 60 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தரைத்தளத்தில் உணவு அருந்துமிடம்‌ மற்றும் பொது நிர்வாக அலுவலகம்‌ அமைக்கப்பட்டுள்ளது. முதல்‌தளம், இரண்டாம்தளம், மூன்றாம்தளம், நான்காம்தளம் மற்றும் 5வது தளங்களில் தகவல்‌ தொழில்‌நுட்ப அலுவலகத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. பால்ஸ்‌ சீலிங், கண்ணாடி தடுப்பு ஆகியவை பளபளவென ஜொலிக்கிறது.

இதுதவிர, இக்கட்டிடத்தில் பொது பயன்பாட்டிற்கு என 6 மின்தூக்கிகள், 2 சேவை மின்தூக்கிகள்‌, தீயணைப்பு வசதிகள்‌, தொலை தொடர்பு வசதிகள்‌, கட்டிட மேலாண்மை அலுவலக வசதிகள், இடிதாங்கி வசதிகள்‌, மழைநீர்‌ சேகரிப்பு வசதிகள்‌, தானியங்கி பண பரிவர்த்தனை வசதி, ஜெனரேட்டர்‌ அறை, பாதுகாப்பாளர்‌ அறை, 6 லட்சம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 லட்சம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மேல்‌நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 கேஎல்டி கொள்ளளவு கழிவுநீர்‌ சுத்திகரிப்பு தொட்டி, கழிவறைகள்‌ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

வெளிப்புறத்தில்‌, 158 கார்‌ மற்றும்‌ 151 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்‌ அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பிரதான பணிகள் மற்றும் சிறு சிறு பணிகள் என அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. இப்புதிய தொழில்நுட்ப கட்டிடத்தில் சுமார் 15 ஆயிரம் சதுர அடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர குறு,சிறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம் குறைந்தபட்சம் 3,250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன்மூலம் பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ‘ஹப்’-ஆக கோவை மாறி வருவதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இப்புதிய ஐடி பார்க் திறப்பு விழா நாளை (5ம்தேதி, செவ்வாய்) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் புதிய ஐடி பார்க்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

* 8 சிறப்பு பொருளாதார மண்டலம்
தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி காரணமாக, சென்னை, கோவை (2 இடங்கள்), மதுரை (2 இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 1,288.03 ஏக்கர் பரப்பில் ரூ.852.46 கோடி முதலீட்டில் 8 சிறப்பு பொருளாதார மண்டலங்களை எல்காட் உருவாக்கி உள்ளது. மேலும், கரூர்-அரவக்குறிச்சி சாலை மற்றும் கரூர்-கோவை சாலை ஆகிய 2 இடங்களில் டைடல் பார்க் அமைக்க 2.5 முதல் 5 ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

* தூத்துக்குடி டைடல் பார்க் இந்த மாத இறுதியில் துவக்கம்
தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் எம்ஜிஆர் நகர் எக்ஸ்டன்சன் ஏரியாவில் நியோ டைடல் பார்க் அமைக்க கடந்த 2023 மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் துரித கதியில் நடந்து முடிந்துள்ளது. சுமார் 32.5 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நியோ டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. 4.16 ஏக்கர் பரப்பளவில், 63100 சதுர அடிஅளவில் உருவாகியுள்ளது.

தரை மற்றும் 4 தளத்துடன் கூடிய இந்த டைடல் நியோ பார்க் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஐடி நிறுவனங்கள் அமைக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 117 கார்கள், 237 பைக்குகள் நிறுத்தி வைக்க முடியும். தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட இந்த டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் துவங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி டைடல் பார்க்கில் உலக புகழ் பெற்ற பல நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது கிளைகள் மற்றும் புதிய ஐடி நிறுவனங்களும் கால்பதிக்கும் வேலையில் போட்டிபோட்டு களமிறங்கியுள்ளன.

10க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை அமைக்க விண்ணப்பித்துள்ளன. அந்த விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன. தற்போது சென்னையை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனத்தின் ஒப்பந்தம் பரிசீலிக்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 8 நிறுவனங்களின் கோரிக்கைகள் ஓரிரு நாட்களில் பரீசீலிக்கப்படும் நிலையில் உள்ளது. இங்குள்ள இடத்தின் அடிப்படையில் மேலும் 7 அல்லது 8 நிறுவனங்கள் இங்கு அமைய இருக்கின்றன.

The post ரூ.114 கோடியில் கோவையில் 2வது ஐடி பார்க்: 3,250 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : 2nd IT Park ,Coimbatore ,Chief Minister ,M. K. Stalin ,Manchester ,South India ,CM ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால அவகாசம்