×

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை முதல் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ.70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளனர். கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அவ்வெற்றி அமைந்தது.

மேலும் வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை எதிர்த்து குகேஷ் விளையாட உள்ளார். இந்தாண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸில் பங்குபெறும் இந்திய செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசிக்கும் அதேபோல் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது. இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் -சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ், எம்.பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024ஐ பெருமையுடன் அறிவிக்கிறது. சென்னையின் முதன்மையான செஸ் போட்டியின் இரண்டாவது பதிப்பான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024ஐ வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நிகழ்வு நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுவார்கள். அவர்களின் விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். சதுரங்க ஆர்வலர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 செலுத்தி தங்கள் இருக்கைகளைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறார்கள். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, in.bookmyshow.com. ஒரு வாரம் பரபரப்பான செஸ் போட்டிகளில் எங்களுடன் சேருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை முதல் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Grand Master Chess Tournament ,Anna Centenary Library ,Deputy Chief Minister ,Udayanidhi Stal ,Chennai ,Udayanidhi Stalin ,Tamil Nadu Sports Development Authority ,International ,India Grand Masters ,Chennai Grand Master Chess Tournaments ,Dinakaran ,
× RELATED மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு...