×

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் ராகுல், பிரியங்கா காந்தி நாளை மீண்டும் பிரசாரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால் இந்த தொகுதியில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரி மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. இவர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரியங்கா காந்தியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் வந்திருந்தனர். இதன்பின் பிரியங்கா காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் வயநாட்டில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும் நாளை மீண்டும் வயநாட்டில் பிரசாரம் செய்கிறார். நாளை காலை 11 மணியளவில் மானந்தவாடி காந்தி பூங்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், பிற்பகல் 3 மணிக்கு அரீக்கோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு இருவரும் பேசுகின்றனர்.

பிரியங்கா காந்தி நாளை முதல் வரும் 7ம் தேதி வரை வயநாட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் வருகையை முன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

The post வயநாடு தொகுதி இடைத்தேர்தல் ராகுல், பிரியங்கா காந்தி நாளை மீண்டும் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Wayanadu ,midterm elections ,Rahul ,Priyanka Gandhi ,Thiruvananthapuram ,Kerala ,Congress ,Sathyan Mogheri ,
× RELATED வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க...