திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இவ்வாண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ. 2) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது, தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை (நவ. 3) கந்த சஷ்டி 2ம் நாள் முதல் நவ. 6ம் தேதி 5ம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நவ. 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1.00 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நவ. 8ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
பக்தர்கள் விரதம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். இவ்வருடமும் திருக்கோயில் உள்பிரகாரத்தில் தங்கிட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் வெளியே பக்தர்கள் தங்குவதற்காக 18 தற்காலிக பந்தல்கள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தரிசன கட்டணம்
திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழக்கமாக உள்ள இலவச பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் தரிசன விரைவு தரிசன கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். யாகசாலையில் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.3000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் துவக்கம்: கடலில் புனித நீராடி பக்தர்கள் விரதம் appeared first on Dinakaran.