×
Saravana Stores

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சிலம்பு செல்வன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த குணா(40), செஞ்சிவேல்(45), வெங்கடேசன்(45), அலெக்ஸ்(33), சின்னத்தம்பு(25), கார்த்திக்(25), வளர்ச்செல்வன்(25), ரகு(45), ரவி(50), மேகநாதன்(50), புஷ்பவனத்தை சேர்ந்த மகேந்திரன்(55), சாமுவேல்(21) ஆகியோர் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 நாட்டிகல் மைல் தொலைவில் வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் கடற்படையினர், திடீரென மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி படகு, மீன்பிடி உபகரணங்களுடன் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதையடுத்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு 12 மீனவர்களையும் அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் வேறு. இதனால் நாங்கள் மீன்பிடி தொழிலையே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.

இலங்கை கடற்படை அட்டூழியத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் தொடர் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Nagapattinam ,Sri Lankan Navy ,Nagai ,Silambu Selvan ,Nagapattinam District Akkaripettai ,Kuna ,Senchivale ,Venkatesan ,Alex ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...