×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: அரசு அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள்பால் மிகுந்த அன்பு கொண்டு வேளாண்மைத் துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை – வேளாண்மை-உழவர் நலத்துறை எனத் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ஆம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்கள். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. உழவர்கள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனிநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.  29.34 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 இலட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம்

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 இலட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2021க்குப் பின் வடகிழக்குப் பருவமழை, 2022- தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை, மண்டஸ் புயல் – 2023 – சூறைக்காற்று, மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெருமழை பாதிப்புகள் ஆகியவற்றால் ஏற்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் பயன்

கரும்பு விவசாய நிலப்பரப்பு 95 ஆயிரம் எக்டரிலிருந்து 1 இலட்சத்து 54 ஆயிரம் எக்டராக அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 624 கோடி ரூபாய் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

ரூபாய் 335 கோடி மானியத்தில் விவசாய இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் ஆதிதிராவிட – பழங்குடியின மக்களுக்கு 73.14 கோடி ரூபாயில் 1,311 கிணறுகள், மின்சார / சூரிய சக்தி பம்ப்செட்டுகள் 100 சதவிகித மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முதன் முறையக ஆதி திராவிடர்- பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள்

27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூன்று புதிய வேளாண் கல்லூரிகளும், ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 7,700 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கப்பட்டுப் பயனடைந்துள்ளனர்.

விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு

திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 இலட்சம் ரூபாய்ச் செலவில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 இலட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை

187 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-இல் 4.90 இலட்சம் ஏக்கரிலும், 2022-இல் 5.36 இலட்சம் ஏக்கரிலும் 2023-ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.

விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள்

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்திட ரூ.14.94 கோடி செலவில் 1,75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன. நெற்பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்திட 4.41 இலட்சம் ஏக்கருக்கு ரூ.12.96 கோடியில் துத்தநாகம் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப்பட்டு 4.50 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

சிறுதானிய இயக்கம்

கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பயறு பெருக்குத் திட்டம்

ரூ. 138 கோடியே 82 இலட்சம் செலவில் பயறு பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5,67,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கம்

மூன்றாண்டுகளில் 11,76,400 எக்டேர் நிலங்களில் ரூ.83.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் எள், சோயா, பீன்ஸ் முதலான எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு 4.03 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தென்னை சாகுபடி

தென்னை சாகுபடிப் பரப்பை அதிகரித்திடும் திட்டத்தின் கீழ் ரூ.40.59 கோடி செலவில் 19,922 தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

வேளாண் கருவிகள் வழங்குதல்

திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியினருக்கு 90 சதவீத மானியத்திலும், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படி தமிழ்நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட 12,525 கிராம ஊராட்சிகளிலும் நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றி ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்துடன் கலைஞரின்அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2021-22- ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் ரூ.610.52 கோடியில் 7,705 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு 23,281 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 4,487 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 44,43,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்

2021 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.103.12 கோடியில் செயல்படுத்தப்பட்ட மாநிலத் தோட்டக் கலை வளர்ச்சித் திட்டம் நடப்பு ஆண்டில் 24.05 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி

* மா, கொய்யா, தென்னை, வாழை, பலா, மித வெப்ப மண்டல பழப்பயிர்கள் மற்றும் பிற வெப்ப மண்டல பாரம்பரிய காய்கறிகள், சுவைதாளிதப் பயிர்கள் ஆகியவற்றிற்கு மரபணு வங்கிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

* 8.26 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பழங்கள், 8.96 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள், 18.76 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள், 2.74 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சுவைதாளித மணம்கூட்டும் பயிர்கள், 0.40 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மூலிகை வாசனைப் பயிர்கள் மற்றும் 1.15 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 2023-2024ஆம் ஆண்டின் மொத்த தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிபரப்பு 40.27 இலட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

விருதுகள்

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண் துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2022-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்தில் 6 இலட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டு முடித்தமைக்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுப் பாராட்டப்பட்டது.
2023-ஆம் ஆண்டில் மக்காச்சோள படைப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு SKOCH ஆர்டர் ஆப் மெரிட் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுதானிய மையத்திற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது. ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட மையம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்று வேளாண்துறை சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் செங்காந்தன் பூங்கா அருகில் 6.09 ஏக்கர் நிலத்தில ரூ.25 கோடி செலவில் பொதுமக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை தமிழ்நாடு திராவிடநாயகர் அவர்கள் 7.10.2024 அன்று திறந்துவைத்தார்கள்.

இப்பூங்கா தமிழ்நாடு வேளாண்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப்பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Stalin ,Tamil Nadu ,Chennai ,Chief Minister of ,K. Stalin ,India ,Tamil ,Nadu ,Department of Agriculture ,Agricultural and Farmer Welfare Department ,
× RELATED சொல்லிட்டாங்க…