×
Saravana Stores

சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அமைக்கப்பட்ட திமுக தொகுதி பார்வையாளர்கள் வரும் 28ம்தேதி ஆலோசனை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட திமுக தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 28ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இந்த குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இடம் பெற்றுள்ளனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழு திமுகவின் அணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு தொகுதிக்கும் பார்வையாளர்களை திமுக நியமித்தது. இந்த தொகுதி தேர்தல் பார்வையாளர்களின் கூட்டம் வரும் 28ம் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

The post சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அமைக்கப்பட்ட திமுக தொகுதி பார்வையாளர்கள் வரும் 28ம்தேதி ஆலோசனை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : DMK Constituency Constituency Observers ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,DMK Constituency Constituency Advisory Meeting ,M. K. Stalin ,DMK ,2026 assembly elections ,Tamil Nadu ,M.K. Stalin ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...