×
Saravana Stores

இந்தியா 156 ரன்னில் சுருண்டது; சான்ட்னர் அபார பந்துவீச்சு.! நியூசிலாந்து வலுவான முன்னிலை

புனே: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்துள்ள நியூசிலாந்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கான்வே 76, ரச்சின் 65, சான்ட்னர் 33 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 7, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஜெய்ஸ்வால் 6 ரன், கில் 10 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. கில் 30 ரன் (72 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சான்ட்னர் சுழலில் எல்பிடபுள்யு ஆக, அடுத்து வந்த விராத் கோஹ்லி 9 பந்தில் 1 ரன் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஜெய்ஸ்வால் 30 ரன் (60 பந்து, 4 பவுண்டரி), ரிஷப் பன்ட் 18 ரன் எடுத்து கிளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். சர்பராஸ் 11, அஷ்வின் 4, ஜடேஜா 38 ரன் (46 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஆகாஷ் தீப் 6, பும்ரா (0) ஆகியோர் சான்ட்னர் சுழலை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 45.3 ஓவரில் 156 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னுடன் (21 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர் 19.3 ஓவரில் 1 மெய்டன் உள்பட 53 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். பிலிப்ஸ் 2, சவுத்தீ 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 103 ரன் முன்னிலையுடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. டெவன் கான்வே 17 ரன் எடுத்து வாஷிங்டன் சுழலில் எல்பிடபுள்யு ஆனார்.

கேப்டன் டாம் லாதம் -வில் யங் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. யங் 23 ரன் எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் வெளியேற, ரச்சின் ரவிந்த்ரா 9, டேரில் மிட்செல் 18 ரன் எடுத்து வாஷிங்டன் சுழலில் மூழ்கினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய லாதம் அரை சதம் அடித்தார். அவர் டாம் பிளெண்டல் உடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தார். லாதம் 86 ரன் (133 பந்து, 10 பவுண்டரி) விளாசி வாஷிங்டன் பந்துவீச்சில் எம்பிடபுள்யு ஆனார். நியூசிலாந்து 2ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்துள்ளது. பிளண்டெல் 30 ரன், கிளென் பிலிப்ஸ் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, நியூசிலாந்து 301 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளதால் இந்திய அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதல் நாளில் 11 விக்கெட், நேற்று 14 விக்கெட் சரிந்துள்ள நிலையில் இன்று பரபரப்பான 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post இந்தியா 156 ரன்னில் சுருண்டது; சான்ட்னர் அபார பந்துவீச்சு.! நியூசிலாந்து வலுவான முன்னிலை appeared first on Dinakaran.

Tags : India ,Santner ,New Zealand ,Pune ,Mitchell Santner ,Dinakaran ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி..!!