×
Saravana Stores

திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது. ஓர் அறிவியக்கம் என்பதன் அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி! கழகத்தைச் சேர்ந்தவர்கள், சிந்தனைத் தெளிவு கொண்ட அறிவாளிகள் என்பதன் அடையாளம்  பொன்முடி அவர்கள்! அப்படிப்பட்டவர், இந்த ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு நூலை நமக்குத் தந்திருக்கிறார். கழகப் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அப்படிப்பட்ட மாலை நேரக் கல்லூரியாக திராவிட வகுப்பாக இந்தக் கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது! இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் பொன்முடி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்

பேராசிரியர் தெய்வசிகாமணியை பொன்முடியாக ஆக்கியவர் தலைவர் கலைஞர்! கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி: அதனால்தான் தன்னுடைய செயல்பாடுகளால் மின்னுகிறார்! நம்முடைய பொன்முடி அவர்களைப் பற்றி தலைவர் கலைஞரின் ‘பஞ்ச் லைன்’-ல் சொல்லவேண்டும் என்றால் “ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி” “அறிவுமுடிதான் பொன்முடி”! இதைவிட வேறு சிறந்த பாராட்டு அவருக்கு தேவையா? திராவிட இயக்கத் தீரர்களைத் தந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் Product அவர்! மூன்று எம்.ஏ. பட்டம் முடித்து, பி.எச்.டி. செய்து, முனைவர் ஆனவர். கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போன்றே, சமூகத்தை பண்படுத்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் மூலமாக வகுப்பெடுப்பார். அன்றைய காலகட்டத்தில், திருச்சி செல்வேந்திரன் பொன்முடி சபாபதி மோகன். இந்த மூவரணி முழங்காத மேடையும் இல்லை; இவர்களின் குரல் ஒலிக்காத ஊரும் இல்லை! இப்படி ஒரு கொள்கை வீரர் – அல்லும் பகலும் உழைத்தால், அவருக்கு தலைவர் கலைஞரின் அங்கீகாரம் கிடைக்காமல் போகுமா?

1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தலைவர் கலைஞர் அவர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதுவரைக்கும் எட்டு தேர்தலில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்று, நான்காவது முறையாக அமைச்சராக மக்கள் பணி ஆற்றி வருகிறார். தம்பி உதயநிதி சொன்னாரே. ஆமாம். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு என்றால், அது, 2003-ல் நடந்த விழுப்புரம் மாநாடு! நான் மாநாட்டிற்கு தலைமைவகித்த முதல் மாநாடு. எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்த நம்முடைய பொன்முடிக்கு இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தலைப்பு என்ன தெரியுமா? “பொன்முடி அழைக்கிறார் புறப்பட்டு வருக!” இதுதான் கடிதத்தின் தலைப்பு! இன்னும் சொல்லவேண்டும் என்றால், மாநாட்டு எழுச்சியைப் பார்த்து, “பொன்முடி உள்ளபடியே இன்றைக்குத்தான் பொன் முடி ஆகி இருக்கார்” என்று தலைவர் கலைஞர் பாராட்டினார். அப்படிப்பட்ட பொன்முடி அவர்கள், திராவிட இயக்கத்திற்குக் கொடையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் பொன்னேடுதான், இந்த “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” புத்தகம்! இது, அவரின் “Dravidian Movement and Black Movement” என்ற முனைவர் பட்டத்தின் ஆங்கில ஆய்வேட்டு நூலின் தமிழாக்கம்! இந்த ஆங்கில நூலை 1998-ல் கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் வெளியிட, மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இன்றைக்கு அதன் தமிழாக்கத்தை, கலைஞர் அரங்கில் நான் வெளியிடும் பெருமை கிடைத்திருக்கிறது! இதைவிட எனக்கு என்ன பாக்கியம் கிடைக்கப்போகிறது. 27 ஆண்டுகள் தாமதமாக, தமிழாக்கம் வருகிறதே என்று கவலை இருந்தாலும்; நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்த நூலை வெளியிட வாய்ப்பு
எனக்கு கிடைத்திருக்கிறதே என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன்

திராவிட இயக்கம் என்பது. Socio-Political Movement-என்று இந்த நூலில் முனைவர் பொன்முடி நிறுவுகிறார். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும், Socio-Political Government என்று சொல்லும் காலகட்டத்தில் இந்த நூல் வெளியாகிறது. பொன்முடி அவர்கள். இந்த நூலில், அன்னைத் தமிழ்நாட்டையும் அமெரிக்கப் பெருநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார். அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடி மக்களின் விடியலுக்கும் விடுதலைக்கும் மேன்மைக்கும் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம்!

டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர். டி.எம்.நாயர் ஆகியோர் இணைந்து, 1916-ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கினார்கள். ‘திராவிட மணி’ இரட்டைமலை சீனிவாசனார், பெருந்தலைவர் எம்.சி.ராஜா உள்ளிட்ட 19 தலைவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் அமைப்பு இது. தொடக்கூடாது கண்ணில் படக்கூடாது படிக்கக் கூடாது முழுமையான உடை உடுத்தக் கூடாது வீடு கட்டக் கூடாது என்று அடிமைகளைவிடக் கேவலமாக நம் மக்கள் நடத்தப்பட்டார்கள். கேட்டால், இதுதான் மனுநீதி என்று சொன்னார்கள். இந்த அநீதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி போராட்டக் களங்கள் கண்டு – வெற்றியும் பெற்ற இயக்கம்தான், நம்முடைய திராவிட இயக்கம்! பழமைவாத கருத்துகளுக்கு எதிராக, முற்போக்குக் கருத்துகளை முன்வைத்தோம். பேச மட்டுமல்ல, பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்று அமைதி வழியில் ஒரு புரட்சியே நடத்தினோம்!

அதனால்தான் இது, அறிவியக்கம்! இந்தியத் துணைக் கண்டத்தில் நம் மக்கள் எப்படி, பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதேபோன்று அமெரிக்க மண்ணில், கருப்பின மக்கள் நிறத்தால் ஒடுக்கப்பட்டார்கள்! ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்வதைவிட ‘ஒதுக்கப்பட்டவர்கள்’ என்று மிகச்சரியாக நம்முடைய பொன்முடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றை 1916 முதல் 1949 வரையிலும், கருப்பர் இயக்க வரலாற்றை 1909 முதல் 1941 வரையிலும் எடுத்துக்கொண்டு, இந்த ஆய்வு நூலை எழுதி இருக்கிறார்.

இங்கு ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ன சொன்னார்கள்? “சூத்திரனுக்கு வேலை என்பது, மற்ற மூன்று வகுப்பினருக்கு அடிமை வேலை பார்ப்பது” அங்கு அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ன சொன்னார்கள்? ‘அடிமைகளே நீங்கள் கடவுளுக்கு கீழ்படிவது போன்று, உங்களுக்கு மேலானவர்களுக்கு கீழ்படியுங்கள்’-என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட அடிமைத்தனத்தை உடைக்கத்தான். இங்கு திராவிட இயக்கமும் அங்கு கருப்பர் இயக்கமும் உருவானது! அமெரிக்க வரலாற்றிலேயே, 2009-ஆம் ஆண்டுதான் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அவர்கள். முதன்முதலாக அதிபரானார். ஆனால், 1966-லேயே நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேறுவது போன்ற. ஒரு புதினத்தை ‘வெள்ளை மாளிகையில்’ என்ற பெயரில் எழுதினார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பொருத்தவரை, சாதியின் பேரால் சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். தடை என்றால், அதை உடை! அதுதான் நம்முடைய Style! அதனால்தான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை! அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்களே என்ற ஆத்திரத்தை, ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! அதை இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே அவர்ஜியாக இருக்கிறது! இதை தெரிந்து தான், தந்தை பெரியார் சொல்லி கொடுத்தார். ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கு பயப்படுவது போன்று, ஆரியம் வேறு எந்தச் சொல்லுக்கும் அஞ்சி நடுங்கியதில்லை” என்று பேசினார். அதை நாங்கள் இன்றைக்கு வரை. கண்கூடாக பார்க்கின்றோமே!
ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும்! சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதி கொடுத்தால் பேச மாட்டார்! இந்தி மாத விழா நடத்த கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க! ஏன், “திராவிட நல் திருநாடு” என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! ‘திராவிடம்’ என்பது ஒருகாலத்தில் இடப்பெயராக இனப்பெயராக மொழிப்பெயராக இருந்தது.

ஆனால், இன்றைக்கு, அது, அரசியல் பெயராக ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்திருக்கிறது! ‘திராவிடம்’ என்பது ஆரியத்திற்கு ‘எதிர்ப்பதம்’ மட்டுமல்ல; ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்! அவர்களுக்கு தலைவர் கலைஞரின் முழக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன், “கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!” இந்த முழக்கத்தை நிலைநாட்ட தான், திராவிட மாடல் இருக்கிறது!

திராவிட மாடல் ஆட்சி என்பது, மனு நீதியை மாற்றி, மக்களுக்கு சமநீதி சமூகநீதி சமவாய்ப்பை உறுதி செய்யும். இதைத்தான், இந்த புத்தகத்தின் 182-ஆவது பக்கத்தில் நம்முடைய பொன்முடி குறிப்பிடுகிறார். “திராவிட இயக்கம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தைக் கனவு கண்டது. அதனால் திராவிட இயக்கத்தின் பெரும்பாலான இலக்குகள், அரசியல் அல்லது பொருளாதார நோக்கை விடவும் சமூகநோக்கில் இருந்தன”-என்று மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் நம்முடைய முழக்கம் என்பது, ‘எல்லார்க்கும் எல்லாம்’-என்று எளிமையாக சொல்கிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதோடு, அனைத்து சமூகங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். இதை எளிமையாகவோ – சீக்கிரமாகவோ – நிறைவேற்றி முடியாது.

ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை ஒடுக்குமுறையை – பழமைவாத மனோபாவத்தை ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது! ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை 100 அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம்
என்பதை மட்டும். என்னால் உறுதியாக சொல்ல முடியும்!

எனவே, இன்றைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் கடந்து வந்த வரலாற்றை, அறிந்து கொள்ளுங்கள்! முனைவர் பொன்முடி அவர்களைப் போல், நம்முடையஇளைஞர்களும் திராவிட இயக்கம், இந்த மண்ணில் நிகழ்த்தி காட்டிய புரட்சி அதனால் விளைந்திருக்கும் நன்மைகள் திராவிட இயக்கத்தின் தாக்கம் அதனால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவேண்டும்! அவற்றை புத்தகங்களாக வெளியிடவேண்டும்! அப்படி செய்தால்தான், நம்முடைய இயக்கம் என்ன சாதித்திருக்கிறது என்பது, உலகம் முழுவதும் சென்றடைய முடியும்! அந்தக் கடமை உங்கள் கைகளில் இருக்கிறது. கொள்கைகள் தான் நம்முடைய வேர்! கொள்கைகளை வென்றெடுக்கத்தான். கட்சியும் ஆட்சியும்! கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது! அதற்கு, “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” போன்ற இன்னும் பல வரலாற்று நூல்கள் உருவாகவேண்டும். ஏன் என்றால், இப்படிப்பட்ட புத்தகங்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் காக்கும் கேடயங்கள்! இதை உருவாக்கிக் கொடுத்த நம்முடைய முனைவர் பொன்முடி அவர்களை மீண்டும். மீண்டும் மனதார உளமார பாராட்டி விடைபெறுகிறேன்!

The post திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dravitha ,Chief Minister ,Mu. K. Stalin ,Dravitha Development Corporation ,Dravitha Movement and the Karupar Movement ,Dravitha Movement ,Garupar Movement ,
× RELATED நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக...