உய்யாலிகுப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதி மற்றும் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர் பகுதி உள்ளது. இந்த இரண்டு கிராமங்களுக்கிடையே எல்லை பகுதியில் உய்யாலிகுப்பம் கிராமத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் 24 சென்ட் காலி மனை உள்ளதாக‌ கூறப்படுகிறது. அந்த பகுதியில் புதுப்பட்டினம் ஊராட்சி சார்பில் 20 மீட்டர் நீளம் கொண்ட சிமென்ட் சாலை அமைக்க ஒன்றிய பொது நிதியின் மூலம் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிமென்ட் சாலை அமைக்கும் பகுதி வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர் பகுதிக்கு சொந்தமானது எனவும் இந்த பகுதியில் சாலையை போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர்கள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்து சாலை பணியை நிறுத்த கோரி காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை அமைக்கும் பணியும் நிறுத்தாவிட்டால் ரேஷன் கார்டு ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்பு, செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ் கணேஷ், தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தலைமையிலான போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், 20 பேர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜை சந்தித்து‌ கோரிக்கை மனுவை அளித்தனர். மேற்கண்ட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புதுப்பட்டினம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் கலெக்டரை நேற்று சந்தித்து அவர்களும் ஒரு கோரிக்கை மனுவினை கலெக்டரிடம் வழங்கினர்‌. அதில், புதுப்பட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் சிமென்ட் சாலை அமைக்கிறோம். இதற்காக முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலை பணியை உடனடியாக முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் சாலைபணியை தற்போது தற்காலிகமாக நிறுத்துவதாகவும் உய்யாலிகுப்பம் மற்றும் புதுப்பட்டிணம் மீனவர் பகுதி மக்களிடையே செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயணா சர்மா தலைமையில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராதா வட்டார வளர்ச்சி பாஸ்கர் மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும். அதில் இருதரப்பு கோரிக்கைகள் குறித்து உரிய சமரச முயற்சி எட்டப்படும். அதன் பின்பு இதில் இரு தரப்புக்கும் பிரச்சனை இல்லாமல் இந்த பணிகள் முடிக்கப்படும் அதுவரை இருதரப்பு மீனவர்களிடையே பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டை தகராறில் ஈடுபடக்கூடாது இருதரப்பிற்கும் சட்ட ரீதியாக பிரச்னை பேசி முடிக்கப்படும் என்றார். இரு தரப்பினரும் பின்பு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post உய்யாலிகுப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: