×
Saravana Stores

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கின்னஸ் சாதனை

நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது ரூபிக் க்யூப்பை விளையாடியிருப்போம். சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த ‘மெகா ஹவுஸ்’ எனும் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் 0.33 கிராம் எடையுள்ள ரூபிக் க்யூப்பை தயாரித்திருக்கிறது. ஒரு கிராமிற்கும் குறைவான எடை கொண்ட இந்த ரூபிக் க்யூப்தான் உலகிலேயே மிகச்சிறியது. நுணுக்கமாக தயாரிக்க வேண்டுமென்பதால் இதை தயாரிக்க சில மாதங்கள் ஆகியிருக்கிறது.

ஒரு ரூபிக் க்யூப்பின் விலை ரூ.4.39 லட்சம். மெகா ஹவுஸின் இணையதளத்தில் இந்த ரூபிக்கை ஆர்டர் செய்யலாம். ‘உலகின் மிகச்சிறிய ரூபிக் க்யூப்’ என்ற சான்றிதழுடன் இந்த ரூபிக் அனுப்பி வைக்கப்படும். மட்டுமல்ல, உலகின் மிகச்சிறிய ரூபிக் க்யூப் என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசமாக்கிவிட்டது இந்த ரூபிக்.

பிங்க் வெட்டுக்கிளி

உலகின் மிக அரிதான வெட்டுக்கிளி இது. மரபணுக்களில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக அந்த வெட்டுக்கிளிகள் பிங்க் வண்ணத்தைப் பெறுகின்றன. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் கூட இந்த வெட்டுக்கிளியைப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இதன் எண்ணிக்கை மிகவும் குறைவு. இப்படியான பிங்க் வெட்டுக்கிளியைப் படமாக்கியிருக்கிறார் ஜேமி என்கிற காட்டுயிர் புகைப்படக் கலைஞர். சமூக வலைத்தளங்களில் கழுகுக் கண் கொண்ட சிறுமி என்று புகழப்படும் ஜேமியின் வயது 8. இந்த பிங்க் வெட்டுக்கிளி குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் ஜேமி. ஒரே நாளில் பத்து லட்ச பார்வைகளை அள்ளிவிட்டது அந்த வீடியோ.

வைரல் வீடியோ

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. கனடாவில் புதிதாக ஓர் உணவகத்தை திறக்கின்றனர். அந்த உணவகத்துக்கு வெயிட்டர் வேலை செய்ய ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்தித்தாள்களில் வெளியாகிறது. அடுத்த நாளே ஆயிரக்கணக்கானோர் வெயிட்டர் வேலைக்காக குவிந்துவிட்டனர். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? அந்த ஆயிரம் பேரும் இந்திய மாணவர்கள். இந்தியாவிலிருந்து படிப்பதற்காக கனடா சென்றவர்கள். கனடாவில் இந்திய மாணவர்களுக்கு சரியாக வேலை கிடைப்பதில்லை. வெயிட்டர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதில் ஆச்சர்யமில்லை.

ஃப்ரூட் மோமோஸ்

இமாச்சலப் பிரதேசத்தின் முக்கியமான ஓர் உணவு, மோமோஸ். இன்று எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது. குறிப்பாக தெருவோர கடைகளில் மோமோஸ் பிரபலம். டெல்லியில் உள்ள லாஜ்பட் நகரின் தெருக்களை மோமோஸ் கடைகள் தான் நிறைத்திருக்கின்றன. அங்கே உள்ள ஒரு கடையில் பழங்களை வைத்து ஃப்ரூட் மோமோஸை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். பொதுவாக சிக்கன், காய்கறிகள், பனீரை வைத்துத்தான் மோமோஸைத் தயாரிப்பார்கள். அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த ஃப்ரூட் மோமோஸ் மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொகுப்பு: த.சக்திவேல்

 

The post நியூஸ் பைட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Rubik ,Mega House ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் குறைய!