தமிழ்நாட்டின் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை அலைவரிசை அமைக்க விண்ணப்ப நடைமுறைகள் தொடக்கம்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: புதிதாக தனியார் பண்பலை அலைவரிசை தொடங்குவதற்கான அனுமதியின் மூலம் நாட்டில் மொத்தம் 234 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலம் அக்டோபர் 14ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 11 நகரங்களில், தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலமும் தொடங்கியுள்ளது. திரைப்படத் துறையை பாதுகாக்கும் வண்ணம் அண்மையில் ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் திரைப்பட திருட்டு நடைபெறாமல் தடுக்க முடியும். திரைப்படங்களின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் சென்னை, கோவை, ஐதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்கள் முன்னோடி மையங்களாக திகழ்வதாகவும், உலக அளவில் பல ஹாலிவுட் படங்களுக்கான கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளும் இந்நகரங்களில் நடைபெறுகிறது.

அண்மையில் இதற்கான ஒரு தேசிய உயர் சிறப்பு திறன் மையத்தை மும்பையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தகவல் ஒலிபரப்பு துறையின் இணை செயலாளர் சஞ்சீவ் சங்கர் பேசுகையில், தமிழ்நாட்டில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வாணியம்பாடி ஆகிய நகரங்களில் தலா 3 அலைவரிசைகளில் புதிய தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க ஏல நடைமுறை தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 18ம் தேதி ஆகும் என்றார்.

The post தமிழ்நாட்டின் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை அலைவரிசை அமைக்க விண்ணப்ப நடைமுறைகள் தொடக்கம்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: