×
Saravana Stores

சாமநத்தம் பறவைகள் சரணாலயம் அமைக்க நீர்வளம், ஊராட்சி துறையை நாடும் வனத்துறை

மதுரை: சாமநத்தம் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறைக்கு மாவட்ட வனத்துறை நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்காக கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே, சாமநத்தம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில், தமிழகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 530 வகை பறவை இனங்களில், ஒரு பகுதி பறவை இனங்கள் வாழ்வதாக பறவையியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த இயற்கை பண்பாட்டு மைய சூழலியலாளர்கள் இந்த கண்மாயில் 2015 முதல் 2022 வரை ஆய்வு செய்தனர்.

இதில், வலசை வந்து செல்லும் பறவை இனங்கள் 25 சதவீதமும், அழியும் நிலையில் உள்ள பறவை இனங்கள் 15.4 சதவீதமும், அவ்வப்போது வந்து செல்லக்கூடிய பறவை இனங்கள் 28.6 சதவீதமும், நிரந்தரமாக கண்மாயிலலேய தங்கி கூடுகட்டி வாழும் பறவை இனங்கள் 56 சதவீதமும் இருப்பது தெரிய வந்தது. மொத்தம், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் இக்கண்மாயில் வனத்துறை தரப்பில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. அதற்காக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையிடமிருந்து கண்மாயின், புல எண் விபரங்களை பெற்று, பறவைகள் சரணாலயமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்காக, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு மாவட்ட வனத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சாமநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கண்மாய் அமைந்துள்ளதால் ஊராட்சி நிர்வாகம் தரப்பில், கண்மாயில் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டால் கிராம மக்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் எந்த பிரச்னையும் இல்லை என, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தீர்மானம் இயற்றி எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், சரணாலயம் அமைந்தால் கண்மாய் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பதால், தற்போது அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நீர்வளத்துறை தரப்பில் அங்கு, சரணலாயம் அமைப்பதற்கான மேம்பாட்டு பணிகளை நாங்கள் மேற்கொள்ள வசதியாக, தடையில்லா சான்றிதழும் வழங்க வேண்டும்.

இவ்வாறு, ஊரக வளர்ச்சித்துறையின் தீர்மானம் மற்றும் நீர்வளத்துறையின் தடையில்லா சான்று இரண்டும் கிடைத்தால் தான், அதை வைத்து அரசுக்கு நாங்கள் கருத்துரு அனுப்பி அடுத்தகட்ட பணிகளை துவக்க முடியும். இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் தரப்பில் கடிதம் கேட்டால் கொடுக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு, கூறினர்.

The post சாமநத்தம் பறவைகள் சரணாலயம் அமைக்க நீர்வளம், ஊராட்சி துறையை நாடும் வனத்துறை appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Samantham Bird Sanctuary ,Madurai ,Samantham Bird ,Sanctuary ,Department of Rural Development and Water Resources ,District Forestry Administration ,MADURAI DISTRICT ,NEAR ,AVANIAPURAM ,SAMANATHAM KANMAI ,Samanatham Bird Sanctuary ,Forestry Department ,Dinakaran ,
× RELATED வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் 22200335...