×
Saravana Stores

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி இன்று (23.10.2024) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திரு.வி.க. நகர், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை ரூ.12.68 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, நடைபெற்றுவரும் பணிகளையும், புரசைவாக்கம், சலவைக் கூடத்தை ரூ.12 கோடி செலவில் நவீனப்படுத்தி, விரைந்து பணிகளை தொடங்குவதற்காகவும், திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தை ரூ.5.35 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, நடைபெற்றுவரும் பணிகளையும், அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பகிர்ந்த பணியிடம் (Co-Working Space) அமைக்கப்பட்டு, நடைபெற்றுவரும் பணிகளையும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படியும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதலோடும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் முழு வேகத்தில் முடக்கிவிட எங்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 2023 – 2024, 2024-2025 ஆகிய ஆண்டுகள் வடசென்னை திட்டம் மற்றும் ஒட்டுமொத்த சென்னை வளர்ச்சி திட்டம் ஆக 140 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த 140 பணிகளில் பல்வேறு பணிகள் அரசாணைகள் பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு, அந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல பணிகள் இன்றைக்கு கட்டுமானங்கள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கின்ற அளவிற்கு அந்த பணிகள் முன்னேற்றம் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மாத்திரம் 668 கோடி ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 28 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த 28 பணிகளின் பூங்கா மேம்பாடு, கடற்கரை மேம்பாடு மூன்று பணிகள், ஏரிகள் மேம்பாடு 3, பேருந்து நிலையம் மேம்பாடு 6, வீடமைப்பு திட்டம் வாழ்வில் குடியிருக்கும் மேம்பாடு திட்டம் 2, சந்தை மேம்பாடு, 4 பள்ளி மேம்பாடு, 2 விளையாட்டு அரங்கம், 2 சமூக மேம்பாடு, 2 இரத்த சுத்திகரிப்பு மையம் 2, என 28 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுவதற்கு மாதிரிகளை பார்வையிட்டு, அதில் இருக்கின்ற சிறு சிறு குறைகளை சரி செய்து முழு வீச்சில் அந்த பணிக்குண்டான அரசாணைகள் பெறப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓப்பந்தம் கோரப்பட்டு அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தை பொறுத்தளவில் மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய சென்னை, தங்கசாலையில் அந்தத் திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் 4,228 கோடி ரூபாய் அளவில் துவக்கப்பட்ட அந்த திட்டம், இன்றைக்கு 5,500 கோடி என்கிற அளவிற்கு அந்தத் திட்டங்கள் விரிவடைந்து இருக்கின்றன. அந்தத் திட்டப் பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தங்கள் பங்களிப்பாக துறை சார்பில் 685 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொண்டாலும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மற்ற பணிகள் மற்ற துறைகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சர் உத்தரவின் படி அந்த நிதியை ஒதுக்கீடு செய்து இருக்கின்றோம்.

இப்படி மாநகர வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வாரந்தோறும் இதற்குண்டான பணிகளை கேட்டறிந்து ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று பகுதிகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது எங்களைப் பொறுத்தளவில் எடுத்துக் கொண்டிருக்கின்ற பணிகள் 230 க்கும் மேற்பட்ட பணிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் இதில் குறிப்பிட்டு கூறுகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு உண்டான முயற்சிகளில் தான் இப்படி காலை நேரத்திலேயே அந்தந்த பணிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை ஆய்வு செய்து இருக்கின்றோம் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இருக்கின்ற பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொள்வது என்கின்ற திட்டமிட்டு இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் எங்கள் துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய திருமதி. காகர்லா உஷா அவர்களும், துறையினுடைய உறுப்பினர் செயலாளர் அன்பிற்கினிய திரு.அன்சுல் மிஸ்ரா அவர்களும்,மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன்குமார் அவர்களும் பகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்களும், இன்றைக்கு அவர் பகுதியிலே நடைபெறுகின்ற இரண்டு பணிகளை பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை ஏற்ப இரண்டு பணிகளை பார்வையிட்டிருக்கின்றோம். 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கின்ற விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா, பாக்சிங் புட்பால் அது போக டென்னிஸ் போன்ற அனைத்து வசதிகளும் உருவாக இருக்கின்ற விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டோம்.

அதைத் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்ற சலவை தொழிலாளர்களுடைய சலவைக்கூடத்தை பார்வையிட்டு அதை மேம்படுவதற்குண்டான அனைத்து பணிகளும் துவக்க வேண்டியுள்ளது. சலவைத் தொழிலாளர்களுக்கு இந்த பணிகள் துவக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைப்பதற்காகவும், இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காகவும், இன்றைக்கு வருகை தந்தோம். யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த இப்படிப்பட்ட சுகாதாரமற்ற சூழ்நிலை தொழிலுக்கு ஏற்றார் போல் வசதி வாய்ப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து முதலமைச்சர் இந்த வடசென்னையை வாடா சென்னையாக ஆக்குவதற்கு பணித்திருக்கின்றார்கள். தொடர்ந்து எங்கள் ஆய்வுகளும் எங்களுடைய பணிகளும் தொடர் ஆய்வுக்கு மேற்கொள்ளப்பட்டு நிறைவாக பணிகள் நிறைவற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உண்டான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., , சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., , மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே, பிரவின் குமார் இ.ஆ.ப., , மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்.ருத்ரமூர்த்தி, அ.பாலசுப்ரமணியன், கண்காணிப்புப் பொறியாளர் ராஜமகேஷ்குமார், செயற்பொறியாளர் விஜயகுமாரி, மாநகராட்சி மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், .தமிழ்ச்செல்வி சசிகுமார், நாகராஜன், தாவுத்பீ, உள்ளாட்சி பிரதிநிதிகள் .தமிழ்வேந்தன், சாமிகண்ணு,.ஐ,சி,எப், முரளி, .எம்.ஏ.டீக்கா, .எம்.இசட். அபாய், வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு தெரிவித்தார்.

 

The post சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Development Corporation ,Minister ,Shekharbabu ,Chennai ,Chief Minister ,Chennai Metropolitan Development Group ,Dinakaran ,
× RELATED ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில்...