×
Saravana Stores

நடிகை பாலியல் புகார்; பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது

திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷை போலீசார் நேற்று இரவு மீண்டும் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் முகேஷ். பிரபல தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் ஆவார். தற்போது கொல்லம் தொகுதி சிபிஎம் எம்எல்ஏவாக உள்ளார். இந்தநிலையில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து கொச்சி மரடு போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்தநிலையில் கடந்த மாதம் நடிகர் முகேஷை மரடு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகையும் முகேஷுக்கு எதிராக ஒரு பாலியல் புகார் கொடுத்திருந்தார். கடந்த 2011ல் திருச்சூர் அருகே உள்ள வாழானிக்காவு என்ற இடத்தில் வைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக வடக்காஞ்சேரி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று இரவு நடிகர் முகேஷை போலீசார் மிகவும் ரகசியமாக வடக்காஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவரிடம் சிறப்பு விசாரணைக் குழு எஸ்பி ஐஸ்வர்யா டோங்க்ரே விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post நடிகை பாலியல் புகார்; பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Mukesh ,Thiruvananthapuram ,CPM MLA ,
× RELATED CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!