×
Saravana Stores

சட்ட விரோதமாக மழைநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி அதிரடி

திருவொற்றியூர்: சென்னை மாநகர பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை முக்கிய நீர்வழித் தடங்களாக உள்ளன. இவற்றில், ஆங்காங்கே பல இடங்களில் விதிமீறி குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. சில இடங்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் விடப்படுகிறது. நீர்வழித்தட கரையோரங்களில் குப்பை கழிவுகள் பெருமளவில் கொட்டப்படுவதால் ஆறுகளின் அகலமும் குறைந்து காணப்பட்டது.

இதனால், இந்த நீர் வழித்தடங்களை பாதுகாக்க சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கூவம், அடையாறு இவற்றின் கரையோர பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பை, கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. மேலும், பல இடங்களில் அடையாறு ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை திட்டுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், சிலர் அத்துமீறி குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நீர் வழித்தடங்களில் குப்பை மற்றும் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல், கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும் என்றும், சட்ட விரோதமாக நீர் நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், எண்ணூரில் உள்ள தனியார் ஆயில் நிறுவனம், தங்களது நிறுவன கழிவுகளை சுத்திகரிக்காமல் சட்ட விரோதமாக மழைநீர் கால்வாயில் வெளியேற்றி வருவதாக புகார் வந்தது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆயில் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக மழைநீர் கால்வாயில் விடுவது தெரிந்தது. இதனால், அந்த நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும், தொடர்ந்து மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடந்தது.

இதில், எண்ணூரில் உள்ள மழைநீர் கால்வாயில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் தனியார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுபோல் மழைநீர் கால்வாயில் கழிவுகளை விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல குழு தலைவர் எச்சரித்தார்.

The post சட்ட விரோதமாக மழைநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Coovam ,Adyar ,Kosasthalai River ,Buckingham Canal ,Chennai ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி, போலீஸ், தீயணைப்பு படை 3...