×
Saravana Stores

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்கலாம்: புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மீதான அமலாக்க துறை வழக்கின் விசாரணையை தொடருமாறு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2018ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. சிபிஐ வழக்கு அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக பதிவு செய்த வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் அமலாக்க துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்க துறை வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளெட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் அமலாக்க துறை வழக்கு விசாரணையை நடத்த எந்த தடையும் இல்லை. அமலாக்க துறை வழக்கு விசாரணையை தள்ளிவைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

The post புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்கலாம்: புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Puducherry MLA ,Ashok Anand ,Puducherry Principal Sessions Court ,Chennai ,Madras High Court ,Enforcement Department ,Puducherry Primary Sessions Court ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூரில் ஆக்கிரமிப்பின்...