புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ.950, வவ்வால் ரூ.550, நண்டு ரூ.400க்கு விற்பனை

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் நேற்று அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் கிலோ ரூ.9500, வவ்வால் ரூ.550, நண்டு ரூ.400, இறால் ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.

இதனால் மீன், மட்டன், சிக்கன் விற்பனை மந்தமாக நடைபெறுவது வழக்கம். மேலும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புரட்டாசி மாதத்தில் கூட்டம் வழக்கத்தை விட வெகுவாக குறைந்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கிய புரட்டாசி மாதம் இந்த மாதம் 17ம் தேதி முடிந்தது. 18ம் தேதி ஐப்பசி மாதம் பிறந்தது. அது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம்.

இதனால், நேற்று அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க குவிய தொடங்கினர். இத்தனைக்கும் சென்னையில் நேற்று காலை மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வியாபாரிகள் மழையில் நனைந்தபடி மீன்களை வாங்கினர். அதே நேரத்தில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் மீன் வாங்க வருவார்கள் என்பதால், மீனவர்கள் முன்கூட்டியே கடலுக்கு சென்று விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் மீன்களை பிடித்து கரை திரும்பியிருந்தனர்.

நீண்ட தூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களும் நள்ளிரவில் கரை திரும்பினர். இதனால் அனைத்து வகையான மீன்களையும் காசிமேட்டில் அதிக அளவில் காண முடிந்தது. இதனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால் உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். அதே நேரத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் மீன் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால், அசைவ பிரியர்கள் அதிகமான மீன்களை வாங்கினர்.

காசிமேட்டில் ஒரு கிலோ வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.950, வவ்வால் ரூ. 400 முதல் ரூ.550, சங்கரா ரூ.500 முதல் 550 வரை, இறால் 450 முதல் ரூ.550 வரை, கடமா ரூ.250, பெரிய நண்டு ரூ.300 முதல் 400 வரை, சிறிய மீன்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் மீன் வாங்க கூட்டம் அதிகம் அளவில் இருந்ததை காண முடிந்தது.

The post புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ.950, வவ்வால் ரூ.550, நண்டு ரூ.400க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: