×
Saravana Stores

ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் ஜேஎம்எம், காங். 70 இடங்களில் போட்டி: முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் 70 இடங்களில் போட்டியிடும் என அறிவிப்பு வௌியாகி உள்ளது. 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13ம் தேதி முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் 20ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து களம் காண்கின்றன.

மேலும் பாஜ, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்(ஏஜேஎஸ்யூ), ஜஜத, லோக் ஜனசக்தி(எல்ஜேபி) ஓரணியாக தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “நடைபெறவுள்ள பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 70 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் ” என்றார்.

லாலு கட்சி அதிருப்தி
‘ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு ஒரு தலைப்பட்சமானது. எங்களை ஆலோசிக்கவில்லை. எங்களுக்கு அனைத்து கதவுகளும் திறந்துள்ளன’ என்று லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். டிஜிபியை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொறுப்பு காவல்துறை இயக்குனர் ஜெனரலாக இருக்கும் அனுராக் குப்தாவை நீக்க வேண்டும் என்று அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய தேர்தல்களின்போது அனுராக் குப்தா ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக அவருக்கு எதிரான புகார்கள் மற்றும் அவர் மீது ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தற்போது அவரை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிபி பொறுப்பை மூத்த டிஜிபி அளவிலான அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சம்பாய்சோரன், ஹேமந்த் சோரனின் அண்ணிக்கு பா.ஜ பட்டியலில் இடம்
ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பாஜ, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்(ஏஜேஎஸ்யூ), ஜஜத, லோக் ஜனசக்தி(எல்ஜேபி) கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இதில் 68 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ 66 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை நேற்று வௌியிட்டது.

அதன்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரய்கெல்லா தொகுதியிலும், ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் ஜம்தாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், ஜார்க்கண்ட் மாநில பாஜ தலைவர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியில், லோரின் ஹெம்ப்ரோம் போரியோ தொகுதியில், கீதா பால்முச்சு சாய்பாசா தொகுதியில், கீதா கோடா ஜெகநாத்பூர் தொகுதியில், மீரா முண்டா பொட்கா தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

The post ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் ஜேஎம்எம், காங். 70 இடங்களில் போட்டி: முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand Council Election JMM ,Cong. 70 place ,Principal ,Hemant Soran ,Ranchi ,Jharkhand ,Mukti Morcha ,Congress ,Legislature ,Jharkhand Legislature ,Cong. 70 ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...