ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது டிரோன் தாக்குதலால் பரபரப்பு: காசாவில் ஒரே நாளில் 50 பேர் பலி

ஜெருசலேம்: காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. காசாவில் ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இதில் ஹமாசின் முக்கிய தளபதிகள் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படைகள் சுட்டுக் கொன்றன.

சின்வார் கொல்லப்பட்டாலும், காசாவில் ஹமாசை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதே சமயம், ‘‘காசாவில் ஹமாஸ் உயிர்ப்புடன் உள்ளது. உயிர்ப்புடன் தொடர்ந்து இருக்கும். இஸ்ரேல் மீதான போரை அவர்கள் தொடர்வார்கள்’’ என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமனேனி நேற்று முன்தினம் கூறினார். காசாவின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதான தனது சண்டை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்வதாக ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்தனர்.

அதன்படி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து ஏராளமான ராக்கெட் மற்றும் டிரோன்களை ஏவி நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு டிரோன் டெல் அவிவ் அருகே கசாரியா நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை தாக்கியது. இதில் கட்டிடம் சேதமடைந்தது. இந்த வீடு நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லம் அல்ல. அவரது தனிப்பட்ட வீடு. தாக்குதல் நடந்த சமயத்தில் பிரதமர் நெதன்யாகுவோ அவரது மனைவியோ அந்த வீட்டில் இல்லை என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மற்ற 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன், சமீபத்தில் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் நெதன்யாகு விமானம் தரையிறங்கிய போது அதை குறிவைத்து ஏமனில் இருந்து ஹவுதி படையினர் ராக்கெட் வீசினர். அந்த ராக்கெட் இடைமறித்து அழிக்கப்பட்டது. இஸ்ரேலின் மற்ற சில பகுதிகளில் ஹிஸ்புல்லா நேற்று நடத்திய ராக்கெட், டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதே சமயம் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 2 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், காசாவில் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர்.

* இஸ்ரேல் ஹெலிகாப்டரை முந்திச் சென்ற டிரோன்
லெபனானில் இருந்து வந்த இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்த 3 டிரோன்களில் இரண்டை இஸ்ரேல் விமானப்படை தகர்த்தது. ஆனால் ஒரு டிரோன் மட்டும் சீறிப்பாய்ந்து நெதன்யாகு வீட்டை தகர்த்தது. இந்த டிரோன், இஸ்ரேலின் போர் ஹெலிகாப்டரை விட வேகமாக முந்திக் கொண்டு பறக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பொதுவாக டிரோன்களை விட ஹெலிகாப்டர்கள் வேகமானவை. ஆனால் ஹெலிகாப்டரை விட வேகமாக பறக்கும் டிரோன்களை ஹிஸ்புல்லா வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

The post ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது டிரோன் தாக்குதலால் பரபரப்பு: காசாவில் ஒரே நாளில் 50 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: