×
Saravana Stores

சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது தென்மாநில போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றி மிகுந்த கண்காணிப்புடன் இருந்து தென் மாநில போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில், தென்பிராந்திய காவல் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம். ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கி கணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்று தருவது.

இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள். இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிக்கிடக்கிறது. போதைப்பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்னை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்கு செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணையவழி குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

2023ம் ஆண்டில் மட்டும், 1,390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், பலர் தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இன்றைக்கு சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை பார்க்க முடிகிறது.

ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, ‘தமிழ்நாடு அமைதியான மாநிலம்.

அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா’ என்று யூடியூபர் ஒருவரது வழக்கில் சமூகவலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள்,

சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம் -ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, நம் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம், ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், கர்நாடகா டிஜிபி அலோக் மோகன், கேரளா டிஜிபி சேக் தர்வேஷ் சாகேப், புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங், ஆந்திரா டிஜிபி துவாரகா திருமல ராவ், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், டிஜிபிக்கள் சீமா அகர்வால், சைலேஷ்குமார் யாதவ், ஆபாஷ்குமார், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபிக்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், அமல்ராஜ், சங்கர், அபின் தினேஷ் மோடக், ஐஜிக்கள் அன்பு, செந்தில்வேலன் மற்றும் தென்பிராந்திய காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

*ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசுக்கு பாராட்டு
சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்த குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள்.

இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை வாழ்த்துகிறேன். இதுபோன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம் என்று முதல்வர் கூறினார்.

The post சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது தென்மாநில போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Southern state police ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Tamil Nadu ,K. Stalin ,
× RELATED போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி...