×

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57,280 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  கடந்த மாதம் இறுதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 4ம் தேதி ஒரு சவரன் ரூ.56,960க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57120க்கு விற்கப்பட்டது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள நடுத்தர மக்களிடையே மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

* தங்கம் விலை உயர்வு எதனால்?
தங்கம் விலை தொடர் உயர்வுக்கு சர்வதேச பொருளாதார நிலவரங்களே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்திருப்பதால் பொதுமக்கள் தங்களது வங்கி வைப்பு நிதியை அதில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் விற்பனை குறைந்துள்ளது, சீன பங்குச்சந்தை சலுகைகளையும் தாண்டி அவர்கள் முதலீட்டுக்காக தங்கத்தை நாடுதல் அதிகரித்துள்ளது. இதுபோன்று உலக அளவிலான சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Diwali festival ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம்...