×

84 வயது முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றச்சாட்டு பதிவு: சிபிஐ நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கேரளாவை சேர்ந்தவர் ஜேக்கப் (84). பெடரல் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2007ல் ஜேக்கப்பும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக ஜேக்கப்பை நேரில் ஆஜராகுமாறு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், தன்னை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் ஜேக்கப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. ஜேக்கப் சார்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, மாருதிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

சி.எஸ்.எஸ்.பிள்ளை வாதிடும்போது, “ஜேக்கப்பின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை. அவருக்கு பல நோய்கள் உள்ளன. புதிய சட்டமான பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 355ல் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் குற்றச்சாட்டு பதிவு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் மனுதாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்” என்றார். சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.மோகன் ஆஜராகி, “மனுதாரர் கேரளாவுக்கும், பெங்களுருக்கும் அடிக்கடி செல்கிறார். ஆனால், நீதிமன்றத்திற்கு வருவதை மட்டும் தவிர்க்கிறார்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஒருவரின் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக அவர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதல்ல. குற்றச்சாட்டு பதிவு என்பது நீதிமன்றத்தின் கடமை. அதைக்கூட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்த முடியும். பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 355ல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய இடம் தரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரிடம் விசாரணை நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

The post 84 வயது முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றச்சாட்டு பதிவு: சிபிஐ நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Jacob ,Kerala ,Federal Bank ,Dinakaran ,
× RELATED அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்