2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்; சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கிறது


சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்ளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி கடந்த 2 நாட்களாக வட தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் நேற்றைய தினம் வடசென்னை புளியந்தோப்பு, ஓட்டேரி, எண்ணூர், திருவொற்றியூர், பெரம்பூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல், நுங்கம்பாக்கம், அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரியிலும் வெள்ளம் சூழ்ந்தது. நேற்றைய மழையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவானது. இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது தற்போது சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், காற்றின் வேகமாறுபாடு காரணமாக தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது. அதனால், சென்னையில் அதிகனமழை மற்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு குறைந்து, ஆபத்தும் நீங்கியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் மற்றும் வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் இணைந்து அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை பரவியிருந்தது. தற்போது அரபி கடல் காற்றழுத்தம் தனியாக பிரிந்து மேற்கு நோக்கி மகாராஷ்டிரா, கோவா சென்றுவிட்டது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. இருப்பினும் அடுத்து வரக்கூடிய 2 நாட்களில் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

அதேபோல், இன்றைய தினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும். மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் 320 கி.மீ. தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வட மேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே நாளை கரையைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரை கடக்கும் போது வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலையில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை காரணமாக இன்று 11 மாவட்டகளில் உள்ள பள்ளிகள் – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் 300 நிவாரண முகாம்கள், தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம், வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் மழை குறித்த தகவலை அறிய கட்டுப்பாட்டு அறை, தமிழ்நாடு டி.என்.அலர்ட் செயலி மூலம் தகவல் அறிந்து உடனடி நடவடிக்கை, நகராட்சி துறை, ஊராட்சி துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து செயல்பாடுகள், இதுதவிர 65 ஆயிரம் தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து களப்பணியாற்றி வருகின்றனர். அதன்படி, மழை மீட்பு பணிகளில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி சிறப்பாக செயலாற்றி வருவது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களில் 7 லட்சம் உணவு பொட்டலம் விநியோகம்
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநகராட்சி தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காரணமாக வெளியில் வராத வண்ணம் இருக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களில் 7,18,885 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கும் 2,500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

The post 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்; சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: