×

வர்த்தகம் வளர்ப்பான் வடிவேலன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குன்றின் மீது குடிகொண்டிருக்கிறான் சொர்ணமலை கதிர்வேல் முருகன். இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் கோயிலை போல் இந்தக் கோயிலிலும் மூலவராக வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. ‘ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்’ என்று திருப்பெயரோடு விளங்கும் இத்தலம் கண்டி கதிர்காமம் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது.எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி வாழ் மக்கள் இலங்கை சென்று வாணிபம் நடத் தினர். அவர்களில் வணிக சமூகத்தை சேர்ந்த சுப்பிர மணியனும் ஒருவர். அவ்வப்போது இலங்கையிலுள்ள கண்டி கதிர்காமம் முருகன் கோயிலுக்கும் சென்று வந்தார் அவர். சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும் கதிர்காமத்து முருகனின் நினைவிலேயே வாடினார் சுப்பிரமணியன். ஒரு இரவு அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், கண்டி கதிர்காமத்திலிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து கோவில்பட்டியில் கோயிலை கட்டி வணங்கும்படி அருளாணையிட்டார். உடனேயே கதிர்காமத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து சொர்ணமலையில் சிறு ஆலயம் எழுப்பினார் அவர்.

கதிர்காமம் கோயிலைப் போல் இங்கும் கருவறையில் செம்பினால் ஆன வேலை மூலவராக பிரதிஷ்டை செய்தார். மூலவருக்கு இடது புறத்தில் கன்னிமூல கணபதிக்கும், வலது புறத்தில் தண்டாயுதபாணிக்கும் சந்நதிகள் அமைத்தார்.‘சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில்’ என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ‘வேல்’, ஞானமருளும் வஜ்ர வேலாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. இந்தியாவில் இங்கு மட்டும் தான் மூலவராக வேலை வணங்கும் வழக்கம் உள்ளது என்கிறார்கள். சிறிது காலம் தனது பொறுப்பில் கோயிலை வைத்திருந்த சுப்பிரமணியன், பின்னர் அமாவாசை சாமியார் என்பவரிடம் அதனை ஒப்படைத்தார். நாளடைவில் அறநிலைத்துறையினர் அந்தப் பொறுப்பை மேற்கொண்டனர். 83 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2006&ம் ஆண்டு சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலைப் புதுப் பிக்க ஆன்மிக அன்பர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். புதிய விமானங்கள், பிராகார மண்டபங்கள், படிக்கட்டுகள், கிரிவலப்பாதை, மின் விளக்கு, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. ஆறடி உயரத்தில் ஐம்பொன்னால் மூலவர் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திரத் தினத்தன்றும் வேல் வடிவான மூலவருக்கு ராஜ அலங்காரம், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் என விதவிதமாக அலங்காரங் கள் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். வணிகர்கள் பெருமளவு இக்கோயிலுக்கு வந்து வேலை வணங்க அதனால் தம் வர்த்தகம் பெருகியதாக சொல்கிறார்கள். பக்தர்களுக்கு காமம், குரோதம், லோபம், கோபம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை தமது வேலால் அகற்றி ஞானப் பொய்கையில் அமிழ்த்துவான், இத்தல முருகன். சொர்ணமலைக் கோயில் அருகே குருமலை உள்ளது. இந்த மலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. இதனால் காற்று வீசும்போது அங்குள்ள மூலிகைக் காற்று மலை மீது தவழ்ந்து வந்து உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலோ அல்லது நடந்தோ போகலாம்.

The post வர்த்தகம் வளர்ப்பான் வடிவேலன் appeared first on Dinakaran.

Tags : Grower Vadivelan ,KADIRVEL MURUGAN ,KOVILPATI, TUTHUKUDI DISTRICT ,Kandy Kathirkamam ,Sri Lanka ,Vail ,Gnanamarulam Sarnamalai Kathirvel Murugan ,
× RELATED பவானி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி